உலக அளவிலும் இந்திய அளவிலும் 2024ஆம் ஆண்டில் உயர் நிர்வாகப் பதவிகளை வகிக்கும் பெண்களின் எண்ணிக்கை குறித்த ஆய்வு முடிவுகளை Grant Thornton Bharat என்னும் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் கடந்த இரு ஆண்டுகளைக் காட்டிலும் உயர் நிர்வாகப் பதவிகளில் இருக்கும் பெண்களின் எண்ணிக்கை சற்றே குறைந்து இருந்தாலும் பத்து, இருபதாண்டுகளை ஒப்பிடும்போது, உயர் பொறுப்பில் இருக்கும் பெண்களின் கணிசமாக அதிகரித்துள்ளது.
ஆய்வில் மேலும் கூறப்பட்டு உள்ளதாவது:
2024ஆம் ஆண்டில் இந்திய அளவில் உயரிய நிர்வாகப் பொறுப்புகளில் (senior management) 34 சதவீதப் பெண்கள் இருக்கின்றனர். உலக அளவில் இது 33 சதவீதமாக இருக்கிறது. முன்னதாக, இதே பெண்களின் சதவீதம் 2023-ல் 36 சதவீதமாகவும் 2022ஆம் ஆண்டில் 38 சதவீதமாகவும் இருந்தது. 2004ஆம் ஆண்டில் இது வெறும் 12 சதவீதமாகவும் 2014ஆம் ஆண்டில் 14 சதவீதமாகவும் இருந்தது.
உயர் பதவிகளில் (senior management) பெண்கள்: இந்தியா Vs உலகம்
ஆசிய - பசிஃபிக் பிராந்தியங்களில் உயர் பதவிகளில் பணியாற்றும் பெண்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் உலக அளவிலான எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. வளர்ந்து வரும் ஆசிய – பசிஃபிக் பிராந்தியங்களில் இந்த எண்ணிக்கை 34 சதவீதம் ஆகவும் வளர்ச்சி அடைந்த ஆசிய – பசிஃபிக் பிராந்தியங்களில் 24 சதவீதம் ஆகவும் உள்ளது.
உலகளாவிய அளவில் தலைமை நிர்வாக அதிகாரிகளாகவும் மேலாண்மை இயக்குநர்களாகவும் இருக்கும் பெண்களின் எண்ணிக்கை 19 சதவீதம் ஆக உள்ள நிலையில், இந்தியாவில் 34 சதவீதமாக உள்ளது.
தலைமை செயல்பாட்டு அதிகாரி (COO) மற்றும் தலைமை நிதி அதிகாரி (CFO) ஆகிய பொறுப்புகளில் பணியாற்றும் பெண்களின் சதவீதம் முறையே 26 மற்றும் 40 ஆக உள்ளது. இது உலகளாவிய புள்ளிவிவரங்களைக் காட்டிலும் அதிகம் ஆகும்.
உயர் நிர்வாகத்தில் பெண்கள் பங்கு
மூத்த உயர் பெண் நிர்வாகிகள் பொறுப்பைப் பொறுத்தவரை 36 சதவீத இந்திய நிறுவனங்களில் பெண்கள் பணியாற்றுகின்றனர். 2024ஆம் ஆண்டில் இந்தியத் தொழில்களில் மூத்த பொறுப்புகளில் 3 சதவீதம் மட்டுமே பெண்கள் இல்லை. இது உலக அளவில் 7 சதவீதமாக இருக்கிறது 6 சதவீத நிறுவனங்களில் குறைந்தபட்சம் ஒரு பெண்ணாவது இருக்கின்றனர். அதே நேரத்தில் 2004ஆம் ஆண்டு 35 சதவீத நிறுவனங்களில் மேலே குறிப்பிட்ட பொறுப்புகளில் பெண்களே இல்லை. இது 2014-ல் 42 சதவீதாக இருந்த நிலையில், தற்போது குறிப்பிடத்தக்க அளவில் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
பன்முகத் தன்மை, சம பங்கு மற்றும் ஒருங்கிணைந்த (DE&I) உத்திகள் பெண்களின் தலைமைக்கு முக்கியமானதாக இருக்கிறது’’.
இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வு அறிக்கையை முழுமையாகக் காண: https://www.grantthornton.in/en/insights/women-in-business-2024/ என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.