கடந்த 10 ஆண்டுகளாக, சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ளதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.  அவர்களுக்கு எதிராக ஆங்காங்கே நடக்கும் வன்முறை சம்பவங்கள் தொடர்பான செய்திகள் வெளியாகி மக்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.


இஸ்லாமியர்களை தாக்கிய போலீஸ்:


இதை தடுக்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.  இப்படிப்பட்ட சூழலில், சாலையில் ஓரத்தில் தொழுகை செய்த இன்ஸ்லாமியர்களை போலீசார் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


அதாவது, டெல்லியின் இந்தர்லோக் பகுதியில் உள்ள ஒரு மசூதியில் கூட்டம் அதிகமாக இருந்ததால், இஸ்லாமியர்கள் சிலர் மசூதிக்கு வெளியே, அதாவது சாலையின் ஓரத்தில் தொழுகை செய்துக் கொண்டிருந்தனர். மண்டியிட்டு 10க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தொழுகை செய்துக் கொண்டிருந்தனர்.






அப்போது, அங்கு வந்த போலீஸ் அதிகாரி  ஒருவர் தொழுகை செய்துக் கொண்டிருந்த இஸ்லாமியர்களை காலால் எட்டி உதைத்து தாக்கியுள்ளார். இதனால், அங்கிருந்த பலரும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களையும் அந்த போலீசார் தாக்கியிருப்பதாக தெரிகிறது. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.  


இதனை அடுத்து, தொழுகை செய்த இஸ்லாமியர்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக போராட்டம் நடந்தது. சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 


சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி:


இது சம்பந்தமான வீடியோவும்  இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தான், இஸ்லாமியர்களை தாக்கிய போலீஸ் அதிகாரி மீது டெல்லி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இஸ்லாமியர்களை தாக்கி விவகாரத்தில்  சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 






இதுகுறித்து இதுகுறித்து டெல்லி வடக்கு டிஜிபி மனோஜ் குமார் மீனா கூறுகையில், ​​"வீடியோவில் பார்த்த போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது அப்பகுதியில் நிலைமை சீரானது.  போக்குவரத்து சேவையையும்  இயல்பானது” என்றார்.