கடந்த 20 ஆண்டுகளாக தனியார் நிறுவனங்களில் நிர்வாக பொறுப்புகளில் இருக்கும் பெண்கள் அடைந்திருக்கும் வளர்ச்சியை ஆராய்ந்து ஆய்வு கட்டுரைகளாக வெளியிட்டு வருகிறது உலகின் முன்னணி தொழில்துறை ஆலோசனை நிறுவனமான கிராண்ட் தோர்ன்டன். 


மூத்த நிர்வாக பொறுப்புகளில் ஜொலிக்கும் பெண்கள்:


அந்த வகையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள பெண்கள் வணிக அறிக்கை 2024இல் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, இந்தியாவில் மூத்த நிர்வாக பொறுப்புகளில் இருக்கும் பெண்களின் விகிதம் கடந்த 10 ஆண்டுகளில் உயர்ந்துள்ளது. கடந்த 2004ஆம் ஆண்டு, மூத்த நிர்வாக பொறுப்புகளில் 12 சதவிகிதம் இருந்த பெண்கள், 2023ஆம் ஆண்டு 36 சதவிகிதம் உள்ளனர்.


கடந்த 2004ஆம் ஆண்டு, 12 சதவிகிதமாக இருந்த பெண்கள் விகிதம் 2014இல் 14 சதவிகிதமாக உயர்ந்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு, மூத்த நிர்வாக பொறுப்புகளில் 38 சதவிகிதம் இருந்த பெண்கள், 2023ஆம் ஆண்டு 36 சதவிகிதமாக குறைந்துள்ளனர்.


முன்னேற்றம் அடைந்த இந்தியா:


இடையில ஓராண்டை தவிர பெண்களின் விகிதம் தொடர் வளர்ச்சி அடைந்து வந்துள்ளது. குறிப்பாக, இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் தலைமை நிர்வாக அதிகாரி (CEO)/நிர்வாக இயக்குநர் பதவிகளையே வகித்து வருகின்றனர். இந்தியாவில் அந்த எண்ணிக்கை 34 சதவிகிதமாக உள்ளது. இது உலகளாவிய சராசரியான 19% ஐ விட அதிகமாகும். 


இந்தியாவை பொறுத்தவரையில், பெண்கள் பெரும்பாலும் தலைமை செயல்பாட்டு அதிகாரி (COO) அல்லது தலைமை நிதி அதிகாரி (CFO) பதவிகளிலேயே பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டு வருகின்றனர். இது, உலகளாவிய சராசரியை விட அதிகம்.


36 சதவிகித இந்திய நிறுவனங்களில் மூத்த மேலாளர் பதவிகளில் பெண்களே உள்ளனர். 2024 ஆம் ஆண்டில்,  3 சதவிகித வணிகத்தில் மட்டுமே மூத்த மேலாளராக பெண்கள் பதவி வகிக்கவில்லை. அதே நேரத்தில் 6 சதவிகித வர்த்தக துறைகளில் குறைந்த பட்சம் ஒரு பெண்ணாவது மூத்த மேலாளர் பதவியில் இருந்திருக்கிறார்.


முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இது குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது. ஆசிய - பசிஃபிக் பிராந்தியங்களில் உயர் பதவிகளில் பணியாற்றும் பெண்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் உலக அளவிலான எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. வளர்ந்து வரும் ஆசிய – பசிஃபிக் பிராந்தியங்களில் இந்த எண்ணிக்கை 34 சதவீதம் ஆகவும் வளர்ச்சி அடைந்த ஆசிய – பசிஃபிக் பிராந்தியங்களில் 24 சதவீதம் ஆகவும் உள்ளது.


இதையும் படிக்க: Watch Video: தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்! எட்டி உதைத்த போலீஸ் - தலைநகர் டெல்லியில் பரபரப்பு!