மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், இன்று ஜிஎஸ்டி கவுன்சிலின் 54வது கூட்டம் நடைபெற்றது. அதன் முடிவில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக, ஆயுள், மருத்துவ காப்பீட்டு திட்டங்களில் பிரீமியத்தின் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்வது, 2000 ரூபாய் வரையிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு 18 வரி விதிக்கப்படுவது குறித்து இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின.


புற்று நோய் மருந்துகள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு:


எதிர்பார்த்தை போலவே, இன்றைய கூட்டத்தில் பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சில புற்றுநோய் மருந்துகளின் விலையை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 


"சில புற்றுநோய் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பு 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. சீவல் தின்பண்டம் (Namkeen) மீதான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.


மருத்துவ காப்பீட்டு திட்டங்களில் பிரீமியத்தின் மீதான ஜிஎஸ்டி வரியை குறைப்பது தொடர்பான முடிவு அடுத்த ஜிஎஸ்டி கூட்டத்தில் எடுக்கப்படும். வரி விகிதத்தை பகுப்பாய்வு செய்யும் அமைச்சர்கள் குழுவும் (GoM) ரியல் எஸ்டேட் தொடர்பான அமைச்சர்கள் குழுவும் இன்று நிலை அறிக்கையை சமர்ப்பித்துள்ளன.


ஜிஎஸ்டி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்னென்ன?


ஆன்லைன் கேமிங் மற்றும் கேசினோக்களின் நிலை அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் கேமிங்கின் வருவாய் ஆறு மாதங்களில் 412 சதவீதம் அதிகரித்து ரூ.6,909 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில் கேசினோக்களின் வருவாய் 34 சதவீதம் அதிகரித்துள்ளது.


இரண்டு புதிய அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளன. பீகாரின் துணை முதல்வர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, மருத்துவம் மற்றும் சுகாதார காப்பீடு மீதான ஜிஎஸ்டி வரியை பகுப்பாய்வு செய்யும். வரையறுக்கப்பட்ட நோக்கத்திற்காக குழுவில் புதிய உறுப்பினர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.


2024 அக்டோபர் இறுதிக்குள் இந்த விஷயத்தை ஆராய்ந்து அறிக்கை தர வேண்டும் என அவர்களிடம் கூறியுள்ளோம். நவம்பரில் கூடும் ஜிஎஸ்டி கவுன்சில் இந்த அறிக்கையின் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும்" என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.



முன்னதாக, 2016 ஆம் ஆண்டில், ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்தபோது, ​​டிஜிட்டல் நிதி பரிவர்த்தனைகளை அதிகரிக்கவும், ரொக்கத்திலிருந்து ரொக்கமில்லா பொருளாதாரத்திற்கு படிப்படியாக மாறுவதற்கும் ரூ.2,000-க்குள் கார்ட் வாயிலாக பணம் செலுத்துவதற்கு விதிக்கப்பட்ட சேவை வரியை மத்திய அரசு கைவிட்டது குற்ப்பிடத்தக்கது.