உண்மையான காதலுக்கு எப்போதும் அழிவு இல்லை என்பார்கள். அப்படிப்பட்ட ஒரு உண்மையான காதலின் வெளிப்பாடாக மனைவி ஒருவர் இறந்த கணவருக்கு கோயில் ஒன்றை கட்டியுள்ளார். அந்தக் கோயிலுக்கு சென்று தினமும் தனது கணவரை வழிபட்டும் வருகிறார். யார் அவர்? எதற்காக அப்படி ஒரு கோயிலை கட்டினார்?
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அன்கி ரெட்டி. இவர் நீண்ட நாட்களாக கோயில் ஒன்றில் பணி செய்து வந்தார். இவர் 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்தார். இவருடைய திடீர் மரணத்தால் அவருடைய மனைவி பத்மாவதி மிகவும் மனம் உடைந்துள்ளார் எனக் கூறப்படுகிறது. ஒருநாள் இரவு பத்மாவதியின் கனவில் அவருடைய கணவர் வந்தார் என அவர் தெரிவித்துள்ளார். அப்போது தனக்கு கோயில் கட்டி அதில் அவரை வழிபட சொல்லியதாக பத்மாவதி கூறுகிறார். இதன் காரணமாக தன்னுடைய கிராமத்தில் கணவருக்கு ஒரு கோயிலை கட்ட தீர்மானித்துள்ளார்.
இறுதியில் அந்த கோயிலை கட்டியும் முடித்துள்ளார். அந்தக் கோவில் வெள்ளை நிற சிலை வடிவில் அவருடைய கணவரை நிறுவி தினமும் வழிபட்டு வருகிறார். சிறப்பு நாட்களிலும் அவர் அங்கு சென்று பூஜை செய்து வருகிறார். அவருடன் சேர்ந்து சில கிராம மக்களும் அங்கு சென்று வழிபட்டு வருவதாக தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 14-ஆம் தேதி செய்தி ஒன்று வெளியானது. அதைத் தொடர்ந்து இச்சம்பவம் மிகவும் வைரலாக தொடங்கியுள்ளது. மனைவியின் இந்தச் செயலை பார்த்து பலரும் நெகிழ்ந்து வருகின்றனர்.
ஆந்திர மாநிலத்தில் இதுபோன்று நடப்பது புதிதல்ல. ஏற்கெனவே ஒரு தொழிலதிபர் ஒருவர் இருந்து போன தன்னுடைய மனைவியின் சிலையை செய்து வீட்டில் வைத்த செய்தி மிகவும் வைரலானது. அதேபோல் சமீபத்தில் அங்கு ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு அவருடைய கட்சியை சேர்ந்த ஒருவர் கோயில் கட்டியுள்ளார். இந்தச் செய்தியும் மிகவும் வைரலானது. தற்போது அதைத் தொடர்ந்து இச்சம்பவமும் மிகவும் பிரபலம் அடைய தொடங்கியுள்ளது.
மேலும் படிக்க:ஒட்டுக்கேட்கவே இல்லை: பெகாசஸ் சர்ச்சையில் மத்திய அரசு பதில் மனு தாக்கல்..!