பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் செல்ஃபோன் உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.


மேலும், முற்று பெறாத அரைகுறை தகவல்கள், ஒருசில ஊடகத்தில் மட்டுமே வெளியான தகவல்களை அடிப்படையாக வைத்தே மத்திய அரசுக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும் மத்திய அரசுத் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ நிறுவனம் தயாரித்த பெகசஸ் எனப்படும் உளவு மென்பொருளை பயன்படுத்தி இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகள், பத்திரிக்கையாளர்கள், நீதிபதிகள் உள்ளிட்டோரின் தொலைபேசிகள் உளவுப்பார்க்கப்பட்டதாக கடந்த ஜூலை 18-ஆம் தேதி சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இந்நிலையில், தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்திருந்த பெகசஸ் உளவு மென்பொருளை தயாரிக்கும், என்.எஸ்.ஓ. குழுமம் “பயங்கரவாதம் மற்றும் கொடூர குற்றங்களை தடுப்பதற்காகவே பல நாடுகளுக்கு எங்கள் மென்பொருளை விற்பனை செய்கிறோம். இந்த மென்பொருளை ஒரு நாட்டின் அரசு குறிப்பிடும் விசாரணை அமைப்புகளுக்கு மட்டுமே தருகிறோம் என்றது.


இதனை கண்டித்து மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய ஜூலை 19-ஆம்  தேதியில் இருந்து தொடர்ந்து நாடாளுமன்ற அவைகளை முடக்கி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. மழைகால கூட்டத்தொடர் முழுவதும் விவாதங்கள் இல்லாமல் அமளியில் முடிந்தது. இதற்கிடையில், பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவாகரத்தில், வழக்கறிஞர் எம்.எல்.ஷர்மா, பத்திரிகையாளர் என்.ராம், கம்யூனிஸ்ட் எம்.பி. ஜான் பிரிட்டாஸ், ஜகதீப் சோக்கர், நரேந்திர மிஸ்ரா, ருபேஷ் குமார் சிங், பரோஞ்சய் ராய் தாக்கூர்தா, எஸ்.என்.எம்.அப்தி மற்றும் இந்திய எடிட்டர்ஸ் கில்ட் அமைப்பு ஆகிய ஒன்பது பேர் இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தனர். ஓய்வுபெற்ற நீதிபதி அல்லது நீதிபதி மூலம் நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதி சூர்ய காந்த், அனிருத்தா போஸ் ஆகியோர் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வருகிறது. 


இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது அவர் மத்திய அரசின் பதில் மனுவை தாக்கல் செய்தார்.


அப்போது அவர், ''பெகாசஸ் விவகாரத்தில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. இஸ்ரேலின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்திய மக்களின் செல்ஃபோன் ஒட்டுக் கேட்கப்படுவதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. இதுபோன்ற உளவு மென்பொருள் விவகாரங்கள் உயர்ந்த தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது.. ஆதலால், இந்தச் சர்ச்சையை இதற்கான தொழில்நுட்ப நிபுணர்கள் குழுவின் மூலம் ஆராய்வது அவசியம். 


ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கும் முன்னர் அதனைப் பற்றிய முழுமையான தகவல்களைத் திரட்டியிருக்க வேண்டும். ஆனால், அப்படிப்பட்ட எந்தத் தகவலும் இன்றி ஒரு முன்முடிவுக்கு வந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் சில ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் மட்டும் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, நாடாளுமன்றத்தில் இவ்விவகாரம் நிமித்தமாக தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி உபாத்யாயா தெளிவான விளக்கங்களை அளித்துள்ளார். 


அப்படியிருக்க மத்திய அரசைக் குறிவைத்து சிலரது தனிப்பட்ட நலன்களுக்காக தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன என்பதே எங்களின் வாதம். ஆகையால், செல்ஃபோன் ஒட்டுகேட்பு தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளையும் சந்தேகத்துக்கு இடமின்றி மறுக்கிறோம்'' என்று தெரிவித்தார்.


இந்த வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.