இந்திய விடுதலைப் போர் நாயகி, முதல் பெண் சத்யாகிரஹி, சுபத்ரா குமாரி சவுகானின் 117-வது பிறந்தநாளில் அவரை கவுரவப்படுத்த சிறப்பு டூடுலை Google உருவாக்கியுள்ளது.


அந்தந்த நாளின் முக்கியத்துவத்தையும், சிறப்பையும் கொண்டாடும் வகையில் கூகுள் இணைய பக்கத்தில், சிறப்பு சித்திரத்தை வடிவமைப்பதை அந்த நிறுவனம் வழக்கமாக வைத்துள்ளது. சித்திரம், 'கூகுள் டூடுல்' என அழைக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று இந்திய விடுதலைப் போர் நாயகி, சுபத்ரா குமாரி சவுகானின் 117 வது பிறந்தநாளில் அவரை கவுரவப்படுத்த சிறப்பு டூடுலை Google உருவாக்கியுள்ளது.


யார் இந்த சுபத்ரா குமாரி?


உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தின் நிகழ்பூா் கிராமத்தில் பிறந்தவா் சுபத்ரா குமாரி. இவா் முதலில் அலகாபாத் நகரில் உள்ள கிராஸ்வெயிட் பெண்கள் பள்ளியில் படித்து 1919-ஆம் ஆண்டு இடைநிலைக் கல்வியில் தோ்ச்சி பெற்றாா். அதே ஆண்டு காந்வாவைச் சோ்ந்த தாக்குர் லட்சுமண சிங் சௌஹானைத் திருமணம் செய்தபின் ஜபல்பூரிற்கு குடிபெயா்ந்தாா். பெண் கல்வி பெரும் சவாலாக இருந்த காலகட்டத்தில் அவர் கல்வி பயின்றது பெரிய சாதனை.
பின்னாளில் அவர் மிகப்பெரிய கவிஞராக உருவெடுத்தார்.


நவரசங்களில் அவர் வீரத்தை மையமாக வைத்து எழுதிய கவிதைகள் புகழ் பெற்றவை. அவருக்கு கவிதை குழந்தைப் பருவத்தில் இருந்தே கைவந்த கலையாக இருந்தது. அவர் வெகு இயல்பாக பள்ளிக்கு குதிரை வண்டியில் செல்லும்போதே கவிதை எழுதுவாராம். அவருடைய முதல் கவிதை 9 வயதில் பிரசுரமானது. அவர் வாலிப பிராயத்தை அடைந்தபோது தேச விடுதலைப் போராட்டம் உச்சத்தில் இருந்தது. அதனால் அவரும் அவரது கணவரும் இணைந்து  விடுதலைப் போராட்டங்களில் ஈடுபட்டனர். சுபத்ரா குமாரியும் அவரது கணவரும், 1921ல் காந்திஜி துவக்கிய ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றனா். சுபத்ரா குமாரிதான் நாக்பூா் நகரில் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்ற முதல் பெண்மணி ஆவாா். அப்போது அவரது விடுதலை வேட்கை ததும்பும் கவிதைகள் இந்திய தேசிய காங்கிரஸின் பால் தேசபக்தர்களை ஈர்த்தது.


தேச விடுதலை மட்டுமல்லாமல் பெண் விடுதலை பற்றியும் அவர் கவி பாடினார். பாலின பேதம், சாதி பேதம் பற்றிய கவிதைகளையும் எழுதியிருக்கிறார். மொத்தம் 88 கவிதைகள், 46 சிறுகதைகளை அவர் எழுதியிருக்கிறார்.


இந்நிலையில், சுபத்ரா குமாரி சவுகானின் 117 வது பிறந்தநாளில் அவரை கவுரவப்படுத்த சிறப்பு டூடுலை Google உருவாக்கியுள்ளது. இதற்கான படத்தை நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஓவியர் பிரபா மால்யா உருவாக்கியுள்ளார். இதில் சவுகான் வெளிர்நிற சேலையில், காகிதத்துடனும் கையில் பேனாவுடனும் காட்சியளிக்கிறார். அவர் ஜான்சி கி ராணி என்ற தலைப்பில் எழுதிய கவிதைத் தொகுப்பின் சில புகைப்படங்கள் டூடுல் பின்னணியில் உள்ளது.  ராணி லட்சுமிபாயின் வீரத்தைக் குறித்து உணா்ச்சிகரமாக எழுதப்பட்ட “ஜான்சி - கி - ராணி” என்னும் கவிதை இவரால் எழுதப்பட்டவைகளில் மிகவும் புகழ்பெற்ற ஒன்று. இந்தி இலக்கியத்தில் அதிகமாக வாசிக்கப்பட்டதும் பாடப்பட்டதுமான கவிதைகளில் இது தலையானது. 


சுபத்ரா குமாரி சவுகானை கூகுள் நிறுவனம் விடுதலை வீரர், அனல் பறக்கும் எழுத்துக்கு சொந்தக்காரர் என்று குறிப்பிட்டுள்ளது.