Maharashtra Car Accident: மகாராஷ்டிராவில் ரீல்ஸ் எடுக்க முயன்றபோது கார் 300 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்ததில், இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
23 வயது இளம்பெண் பலி:
மகாராஷ்டிராவில் பாறையின் உச்சியில் காரை ஓட்டி பழகும்போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம், அதிவேகமாக பின்னோக்கிச் சென்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் முழுவதும் அந்த பெண்ணின் நண்பர் காருக்கு வெளியே இருந்து எடுத்த வீடியோவில் பதிவாகியுள்ளது. அதன்படி, சாம்பாஜி நகரைச் சேர்ந்த 23 வயதான ஸ்வேதா தீபக் சர்வேஸ் காருக்குள் ஓட்டுனரின் இருக்கையில் அமர்ந்திருக்கிறார். அவரது ஆண் நண்பரான சுராஜ் சஞ்சவ் முலே வெளியே இருந்தபடி வீடியோ பதிவு செய்துள்ளார்.
300 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்:
நண்பர்களான இருவரும் திங்கட்கிழமை பிற்பகல் ஔரங்காபாத்தில் இருந்து சுலிபஞ்சன் ஹில்ஸ் நோக்கி பயணித்துள்ளனர். அந்த இடத்தை அடைந்ததும் பிற்பகல் 2 மணியளவில், சர்வேஸ் காரில் ஏறி மெதுவாக அதைத் பின்னோகி செலுத்தியுள்ளார். குன்றின் முனையிலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் மட்டுமே கார் இருந்தபோதும் அவர் வாகனத்தை தொடர்ந்து செலுத்தியுள்ளார். காரின் வேகம் அதிகரிப்பதை கண்டதும் மெதுவாகச் செல்லும்படி சுராஜ் எச்சரித்துள்ளார். அதற்குள் கார் முழு வேகமெடுக்க "கிளட்ச், கிளட்ச், கிளட்ச்" என கத்திக்கொண்டு ஓடியுள்ளார். ஆனால் கார் நொடிநேரத்தில் குன்றில் இருந்து சரிந்து 300 அடி ஆழ பள்ளத்தக்கில் கவிழ்ந்து நொறுங்கியது. இதில் படுகாயமடைந்த ஸ்வேதா தீபக் சுர்வேஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பெண்ணின் உடல் மீட்பு:
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பெண்ணின் உடலையும் , சிதைந்து கிடந்த காரையும் மீட்டனர். இதுதொடர்பான விசாரணையில், ஸ்வேதா தீபக் சர்வேஸ் மற்றும் சுராஜ் சஞ்சவ் முலே ஆகியோர், சுலிபஞ்சனில் உள்ள தத்தாத்ரேயர் கோவிலுக்கு சென்றனர் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், ரீல்ஸ் எடுக்கும் நோக்கில் அந்த பெண் காரை பின்னோக்கி செலுத்தியதாகவும் கூறப்படுகிறது. மழைக்காலங்களில், சுலிபன்ஹான் மலைகள், அழகிய இயற்கைக் காட்சிகளை ரசிக்க அதிக எண்ணிக்கையில் வரும் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழியும் என கூறப்படுகிறது.