கணவரிடமிருந்து பிரிந்து வாழும் மனைவிக்கும், அத்தம்பதியின் மகளுக்கும் சேர்த்து, கணவர் மாதாமாதம் 12 ஆயிரம் ரூபாய் பராமரிப்புத் தொகை வழஙக வேண்டும் என புனே குடும்பநல நீதிமன்றம் ஒன்று முன்னதாக உத்தரவிட்டது.
மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு
இந்நிலையில், குடும்பநல நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்தும், தன் மனைவி சம்பாதிப்பதற்கு தன்னிடம் வழியில்லை என பொய் கூறி உள்ளதாகவும், மனைவியை எதிர்த்துப் போராட தன்னிடம் எந்தவித பண ஆதாரமும் இல்லை எனவும் கூறி, மும்பை உயர் நீதிமன்றத்தில் அக்கணவர் முன்னதாக மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று முன் தினம் (ஜூன்.10) நீதிபதி பாரதி டாங்க்ரே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி, ”ஒரு பெண், அவர் பட்டதாரி என்பதற்காக வேலை செய்ய வேண்டும், அவரால் வீட்டில் இருக்கவே முடியாது என அர்த்தம் இல்லை.
பெண் வேலை செய்வதும் செய்யாததும் அவர் விருப்பம்
நம் வீடுகளில் வருவாயில் பெண்களும் பங்களிக்க வேண்டும் என்பதையே நமது சமூகம் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு பெண் வேலை செய்வது முற்றிலும் அவர் விருப்பத்தைச் சார்ந்தது” எனத் தெரிவித்தார்.
பெண் நீதிபதியான டாங்ரே, தொடர்ந்து பேசிய நிலையில், ”இன்று நான் ஒரு நீதிபதி, நாளை நான் வேலைக்குச் செல்ல முடியாமல் வீட்டிலேயே இருக்கலாம் என்று வைத்துக் கொள்வோம். 'நீதிபதியாகும் தகுதி உங்களுக்கு உள்ளது. எனவே நீங்கள் வீட்டில் இருக்கக் கூடாது' என என்னிடம் வந்து யாரும் கூற முடியாது ' என்றும் தெரிவித்தார்.
கடந்த 2010ஆம் ஆண்டு இத்தம்பதி திருமணம் செய்து கொண்ட நிலையில், கணவரைப் பிரிந்த மனைவி 2013ஆம் ஆண்டு முதல் மகளுடன் சென்று தனியாக வாழத் தொடங்கியுள்ளார். தொடர்ந்து, அப்பெண் தனது கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது குடும்ப வன்முறை புகார் அளித்தார்.
மேலும் குடும்பநல நீதிமன்றத்தில் பராமரிப்பு கோரி அவர் மனு தாக்கல் செய்த நிலையில், அப்பெண்ணின் மனுவை ஏற்றுக்கொண்ட குடும்ப நல நீதிமன்றம், அக்கணவர் மாதம் 5,000 ரூபாய் மனைவிக்கும், 7,000 ரூபாய் இவர்களது குழந்தைக்கும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
வழக்கு ஒத்திவைப்பு
இந்நிலையில், மனைவியின் சார்பாக வாதிட்ட வழக்கறிஞர், அக்கணவரின் வாதங்களுக்கு பதிலளிக்க கால அவகாசம் கோரியதை அடுத்து வழக்கு வரும் வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கணவரிடமிருந்து பிரிந்த படித்த அல்லது வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு வழங்கப்படும் ஜீவனாம்சம் குறித்து கடந்த காலங்களில் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புகள் விவாதப் பொருளாகி உள்ளன.
வேலைக்குச் செல்லும் பெண்கள் குறித்த கடந்த காலத் தீர்ப்புகள்
2015ஆம் ஆண்டு, தனது கணவரிடமிருந்து பிரிந்த ஒரு பெண்ணுக்கு அவர் படித்தவர், அவருக்கு வேலைவாய்ப்பு பெற வாய்ப்பு உள்ளது என்பதற்காக பராமரிப்புத் தொகையை மறுக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதேபோல் 2017ஆம் ஆண்டு "தன்னை பராமரிக்கும் மற்றும் பராமரிக்கும் திறன் கொண்ட ஒரு உழைக்கும் பெண் தனது பிரிந்த கணவரிடமிருந்து பராமரிப்புத் தொகை பெறத் தகுதியற்றவர் என மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
2019 ஆம் ஆண்டில், டில்லி நீதிமன்றமும் உழைத்து தன்னை பார்த்துக்கொள்ளும் திறன் கொண்ட ஒரு மனைவி தனது கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் கோருவதற்குத் தகுதியற்றவர் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.