பீகாரில் 4 கை, கால்களுடன் பிறந்த குழந்தைக்கு வெற்றிக்கரமாக அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ள நிலையில் பொதுமக்கள் நெகிழ்ச்சியடையும் வகையில் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
பீகாரில் உள்ள கிராமம் ஒன்றில் வாழ்ந்து வரும் சிறுமி ஒருவர் பிறக்கும் போதே தலா 4 கை, கால்களுடன் பிறந்துள்ளார். சாமுகி குமாரி என்ற சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்ய அவரது பெற்றோர்கள் பணமில்லாமல் தவித்துள்ளனர். இதனைக் கேள்விப்பட்ட பிரபல நடிகர் சோனுசூட் அந்தச் சிறுமியை சூரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார். இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் 7 மணி நேர அறுவை சிகிச்சையை சாமுகி குமாரிக்கு வெற்றிக்கரமாக செய்துள்ளனர். சிகிச்சைக்குப் பின் சாமுகி குமாரி நன்றாக இருப்பதாகவும், சிறுமி விரைவிலேயே வீடு திரும்ப இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் சோனுசூட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறுமி 4 கை, கால்களுடன் இருக்கும் புகைப்படத்தையும்,அறுவை சிகிச்சைக்குப் பின் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த புகைப்படங்களில் ஒன்றில் சோனுசூட் அந்த குழந்தைக்கு சாக்லேட் ஒன்றை வழங்குகிறார். அவரின் இந்த உதவிக்கு இணையவாசிகள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். மேலும் அவரது பதிவில் பூமியில் வாழும் சிறந்த மனிதர் நீங்கள் என புகழ்ந்துள்ளனர்.
சோனுசூட்டுக்கு இத்தகைய உதவிகள் செய்வது என்பது புதிதல்ல. தமிழில் சில படங்களில் வில்லனாக நடித்த சோனுசூட் கொரோனா காலத்தில் ஹீரோவாக மாறினார். கொரோனா ஊரடங்கால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்த மக்களை தனது சொந்த செலவில் அனுப்பி வைத்தார். அதுமட்டுமல்லாமல் வேலையிழந்த பெண்ணுக்கு வேலை வாங்கி கொடுத்தது, உதவி என அவரிடம் கோரிக்கை வைத்த பல மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பது என அவர் கொண்டாடப்பட்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்