சிறுதானியங்களின் நன்மைகள் பற்றி அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு விளக்க அந்த வீடியோவை பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 


பிரதமரின் பரிந்துரையை ஏற்று, 2023-ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐ. நாடுகள் சபை அறிவித்தது. இதன் அடிப்படையில் 2023ம் ஆண்டில் இந்தியாவை சிறுதானியங்களின் சர்வதேச மையமாக மாற்ற வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு கண்ணோட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


உலகின் உணவுப் பிரச்சனைக்கு சோளம், கம்பு, கேழ்வரகு போன்ற எல்லா காலநிலையையும் தாக்குப்பிடிக்கும் சிறுதானியங்கள் நல்ல வரப்பிரசாதம் என ஐ.நா. கூறியுள்ளது.


இந்நிலையில் அருணாச்சலப் பிரதேசத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் உள்ளூர் பெண் ஒருவர் சிறுதானியங்களின் நன்மையை எடுத்துக் கூறுகிறார். அந்த வீடியோவில் அவர் உள்ளூர் ஸ்பெஷல் உணவான மார்வாவை செய்து கொடுக்கிறார். கடந்த காலங்களில் மக்கள் சிறு தானிய உணவுகளை உண்ட போது ஆரோக்கியமாக இருந்தனர் என்றும் அவர் கூறுகிறார்.


அந்த வீடியோவை பிரதமர் மோடி ரீட்வீட் செய்துள்ளார். அந்தப் பெண் தெய்வீக உணவு (ஸ்ரீ அன்னம்) குறித்து மிகச்சரியாகக் குறிப்பிட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.






மத்திய அரசு சிறுதானிய உணவுகளை ஸ்ரீ அன்னம் என்று குறிப்பிடுகிறது. கடந்த பட்ஜெட் தாக்கலின் போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறுதானிய உணவுகளை ஸ்ரீஅன்னம் என்று குறிப்பிட்டார்.


அதன் கீழ் பதிவர் ஒருவர், ஒருகாலத்தில் எங்கள் பகுதியில் சோள ரொட்டியும், கேழ்வரகு லட்டும் பிரபலமாக இருந்தது. இப்போது அந்த உணவுகள் எல்லாம் என்ன ஆனது என்றே தெரியவில்லை என்றார்.


 இந்தியாவில் காரீஃப் பருவத்தின் முதன்மை தானியமான சிறுதானியங்கள்,  விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதுடன்,  உலகம் முழுவதும், உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பை உறுதி செய்கின்றன.  இதனைக் கருத்தில்கொண்டே ஐ.நாவின் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளில்,  மத்திய அரசு சிறுதானியங்களை முன்னிலைப்படுத்தியது.


2022 டிசம்பர் 6ம் தேதி  ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு, சர்வதேச சிறுதானிய ஆண்டு 2023க்கான துவக்கவிழாவை இத்தாலியின் ரோம் நகரில் ஏற்பாடு செய்திருந்தது. இதில் இந்தியா சார்பில் அதிகாரிகள் குழு பங்கேற்றது. இதையடுத்து, சர்வதேச அளவில், சிறுதானியங்களை முன்னெடுத்துச் செல்வதை இந்தியாக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. இதனை அடைவதில்,  அனைத்து மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள்,  விவசாயிகள் , ஸ்டார்ட் –அப் நிறுவனங்கள்,  வணிகர்கள், உணவங்கள் மற்றும்  இந்திய தூதரகங்கள் ஒருகிணைந்த அணுகுமுறையுடன் செயல்பட வேண்டும் என வேளாண்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சிறுதானியங்கள் குறித்த விழிபுணர்வை ஏற்படுத்த வேண்டும்.


இதற்கான பணிகளில், ஜனவரி மாதம் 15 நாட்கள்,  மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சகம் சார்பில்,  15 நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதில்,  விளையாட்டு வீரர்கள், ஊட்டச்சத்து மற்றும் உடற்பயிற்சி நிபுணர்களைக்  கொண்டு,  விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிடுதல், வெபினார்களை நடத்துதல் உள்ளிட்டவை இடம்பெற உள்ளன.  


இதேபோல், உணவு பதப்படுத்தும் துறை அமைச்சகத்தின் சார்பில், ஆந்திரா, மத்தியப் பிரதேசம் மற்றும் பீஹாரில் சிறுதானிய உணவுத் திருவிழா மற்றும் கண்காட்சிகள், நடத்தப்பட உள்ளன.  இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தின் சார்பில், தமிழ்நாடு, கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில்,  சரியான உணவைப் சாப்பிடுங்கள் என்ற உணவுக் கண்காட்சி நடத்தப்பட உள்ளது.


140 நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள், சிறுதானிய ஆண்டு 2023-றைக் கொண்டாடும் வகையில், அந்நாடுகள் வாழ் இந்தியர்கள் பங்கேற்கும், கண்காட்சிகள்,  உணவுத் திருவிழாக்கள் உள்ளிட்டவற்றை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முழுவதும் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.  


இதேபோல் ஜி-20 கூட்டங்களில் பங்கேற்கும் வெளிநாட்டினருக்கு, சிறுதானியங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவை  சாப்பிடும் அனுபவத்தை வழங்குதல்,  விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்பினருடன்  கலந்துரையாடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.