டெல்லி - என்சிஆர் பகுதியில் ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன் வெடித்து ஒரு பெண் இறந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. யூடியூபர் ஒருவர், இந்த சோகமான சம்பவத்தை விவரித்துள்ளார்.


 






தொழில்நுட்பம் தொடர்பான வீடியோக்களை வெளியிடும் யூடியூபர் ஒருவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், தனக்கு தெரிந்த நபரின் அத்தை ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தியதாகவும் தூங்கும் போது அதை தலையணையில் முகத்திற்கு அருகில் வைத்திருந்ததாகவும் அப்போது, ஸ்மார்ட்போன் வெடித்து அவர் உயிரிழந்தாகவும் குறிப்பிட்டுள்ளார்.


இந்த ட்வீட்டிற்கு பதிலளித்த சியோமி, இந்த விஷயத்தை விசாரித்து வருவதாகக் கூறியுள்ளது. பேட்டரி வெடித்ததில் பயனர் இறந்ததாகக் குறிப்பிட்டுள்ள யூடியூபர், வெடித்த ஸ்மார்ட்போனின் படங்களையும் பகிர்ந்துள்ளார். அதில், முன் பேனல் முழுவதுமாக வளைந்து உடைந்துள்ள நிலையில், ஸ்மார்ட்போனின் பேட்டரி வெடித்திருப்பது பின் பேனல் மூலம் தெரிகிறது.


அந்த ட்வீட்டில் அந்தப் பெண்ணின் பயங்கரமான படமும் உள்ளது. அதில், அவர் படுக்கையில் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் பார்க்கலாம். “வணக்கம் @RedmiIndia, @manukumarjain, @s_anuj நேற்று இரவு என் ஆன்ட்டி இறந்து கிடந்தார். அவர், Redmi 6A ஐப் பயன்படுத்தினார். அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது, ஃபோனைத் தலையணைப் பக்கத்தில் தன் முகத்தின் அருகே வைத்திருந்தார். 


சிறிது நேரம் கழித்து அவருடைய தொலைபேசி வெடித்தது. இது நமக்கு மோசமான நேரம். ஆதரிக்க வேண்டியது ஒரு பிராண்டின் பொறுப்பு" என மன்ஜீத் என்ற யூடியூபர் குறிப்பிட்டுள்ளார்.


இது தொடர்பாக, நியூஸ் 18 செய்திதளம், YouTuber மற்றும் Xiaomi நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசியுள்ளது. இரு தரப்பினரின் பதில்களுடன் செய்தி வெளியிடப்படும் என செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்துடன் தொடர்பு கொள்ள தங்கள் குழு முயற்சித்து வருவதாகவும், சம்பவத்திற்கான காரணத்தை தெரிந்து கொள்ள விசாரணை செய்து வருவதாகவும் சியோமி ட்விட்டரில் பதில் அளித்துள்ளது.


மற்றொரு ட்விட்டர் பதிவில், பாதிக்கப்பட்ட குடும்பம் எளியவர்கள் என்றும் பாதிக்கப்பட்டவரின் மகன் இராணுவத்தில் இருப்பதாகவும் யூடியூபர்  கூறியுள்லார்.  “அவரது குடும்பம் மிகவும் எளிமையானது, அவருடைய மகன் இந்திய ராணுவத்தில் இருக்கிறார். அவர்களுக்கு அவ்வளவாக தெரியாது. அவர் தனது மொபைலை அழைப்பதற்காகவும் யூடியூப் பார்ப்பதற்காக மட்டுமே பயன்படுத்துகிறார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.


​​​​ஸ்மார்ட்போன் வெடிப்பதைப் பற்றி நாம் கேள்விப்படுவது இது முதல் முறை அல்ல. இந்த ஆண்டின் தொடக்கத்தில் பயனர் ஒருவர் போனில் பேசிக் கொண்டிருந்தபோது, அந்த போன் வெடித்து, அவரது முகம் மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது.