விதிகளை கடைபிடிப்பதும், அதை மீறுவதும்தான் பெரும்பாலான மக்களின் வாடிக்கையாக உள்ளது. ஆனால், ஒரு சிலர்தான் அனைத்தையும் சரியாக செய்து நம் மனதினை ஆட்கொள்வார்கள். அப்படி, ஒரு வடமாநில நடுத்தர பெண் ஒருவர், தனக்கு மட்டுமல்லாது தான் அழைத்து வந்த ஆட்டுக்குட்டிக்கும் டிக்கெட் எடுத்த நிகழ்வு அனைவரது மனதையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. 


இதுகுறித்து வைரலான அந்த வீடியோவில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம். 


சத்தீஸ்கர் கேடரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி அவனிஷ் ஷரண் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் 22 வினாடிகள் கொண்ட ஒரு வீடியோ கிளிப்பை பதிவிட்டார். அதில், ஒரு நடுத்தர வயது பெண் ஒருவர், தனது ஆட்டுக்குட்டி மற்றும் மற்றொரு நபருடன் டிரெயினில் பயணித்துள்ளார். அப்போது, அனைவரிடமும் டிக்கெட் இருக்கிறதா என்று சோதனை செய்து வந்த டிக்கெட் பரிசோதகர் அங்கு நின்றிருந்த பெண் பயணியிடம் எங்கே? உங்கள் டிக்கெட்டை காட்டுங்கள் என்று கேட்டுள்ளார்.






அப்போது அந்த பெண், தனக்கு அருகிலிருந்த மற்றொரு நபரிடமிருந்து டிக்கெட்டை வாங்கி டிக்கெட் பரிசோதகரிடம் கொடுத்துள்ளார். அதை வாங்கி பார்த்த அவர் கேலியாக, உங்க இரண்டு பேருக்கு மட்டும் டிக்கெட் வாங்கி இருக்கீங்க, அந்த ஆட்டுக்குட்டியோட டிக்கெட் எங்கே? என்று விளையாட்டாக கேட்டுள்ளார். 


அதற்கு அந்த நடுத்தர வயது பெண், ஒரு பெரிய புன்னகையுடன் ஆட்டுக்குட்டிக்கும் டிக்கெட் எடுத்துள்ளோம் என்று அந்த டிக்கெட்டையும் எடுத்து காண்பித்துள்ளார். இதனால், பிரமித்துப்போன அந்த டிக்கெட் பரிசோதகர் உண்மையில் ஆட்டுக்குட்டிக்கு டிக்கெட் எடுத்தீர்களா? என்று கேட்க, மிகப்பெரிய மகிழ்ச்சி சிரிப்புடன் ஆம் என்று தலையாட்ட அவ்வளவுதான் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.


இதைபார்த்த நெட்டிசன் ஒருவர்,  “ஆடு அவளுக்கு ஒரு விலங்கு மட்டுமல்ல. அது அவளுடைய குடும்பத்தின் ஒரு அங்கம், குடும்ப அங்கத்தினரை எவரும் இப்படித்தான் நடத்துவார்கள்; அவர்களை சமமாக கருதி நடத்துங்கள்! அவளிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது! என்ன ஒரு எண்ணம் மற்றும் பெரிய இதயம்! அவளுடைய புன்னகை அனைத்தையும் சொல்கிறது!” என பதிவிட்டார். 


விலங்குகளுடன் ரயிலில் பயணம் செய்யலாமா..? 


செல்லப்பிராணிகளுடன் பயணிப்பவர்களுக்கான குறிப்பிட்ட விதிகளை இந்திய இரயில்வே விதிமுறைகள் கொண்டுள்ளது. அதில், ஏசி முதல் வகுப்பு மற்றும் முதல் வகுப்பு பெட்டிகளில் ஒரு முழு கூப்பும் எடுத்து வரும் பயணிகளால் முன்பதிவு செய்யப்பட்டிருந்தால் மட்டுமே விலங்குகள் பயணிக்க அனுமதிக்கப்படும். செல்லப்பிராணிகளுக்கு டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு முன், விலங்குகளுக்கான தடுப்பூசி மற்றும் உடற்தகுதி சான்றிதழ்களை அதிகாரிகள் முன் சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.