மகாராஷ்ட்ரா மாநிலத்தில் அமைந்துள்ளது ராய்காட் மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ளது கோர்காவ்ன். இங்குள்ள புரர் பகுதியில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் மாணவர்கள் ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல போட்டிகளுக்கு பயிற்சிபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது.


ஈட்டி எறிதல்:


இந்த நிலையில், இன்று அந்த பள்ளியில் மாணவர்கள் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, 15 வயது நிரம்பிய மாணவனான ஹூஜேபா தவாரே என்ற சிறுவனும் ஈட்டி எறிதல் பயிற்சிக்காக வந்திருந்தான். தாலுகா அளவிலான போட்டி நடைபெற இருப்பதால் மாணவர்கள் அதற்கான பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.


இந்த நிலையில், ஈட்டி எறிதல் மாணவர்கள் ஒரு முனையில் இருந்து ஈட்டிகளை எறிந்து பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்முனையில் மாணவன் ஹூஜேபா தவாரே நின்று கொண்டிருந்தார். அப்போது, அவர் தனது ஷூவின் கயிறு அவிழ்ந்து விட்டதால் அதை குனிந்து கட்டிக் கொண்டிருந்தார்.


பறிபோன உயிர்:


அப்போது, எதிர்முனையில் இருந்த மாணவர் ஒருவர் வீசிய ஈட்டி ஒன்று மின்னல் வேகத்தில் பறந்து வந்தது. அந்த ஈட்டி யாரும் எதிர்பாராதவிதமாக ஷூ லேசை கட்டிக் கொண்டிருந்த மாணவர் ஹூஜேபா மீது பாய்ந்தது. இதைக்கண்ட அங்கிருந்த ஆசிரியர்களும், மாணவர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர்.


ரத்த வெள்ளத்தில் சரிந்த தாவரேவை அங்கிருந்த ஆசிரியர்களும், சக மாணவர்களும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.


போலீசார் விசாரணை:


இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதை விபத்து மரணமாக பதிவு செய்துள்ள போலீசார், உயிரிழந்த மாணவரை நோக்கி ஈட்டி எறிந்த மாணவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் பின்னணியில் வேறு ஏதேனும் உள்நோக்கம் உண்டா? என்றும் விசாரித்து வருகின்றனர்.


இந்த சம்பவம் தொடர்பாக, பள்ளியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவையம் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். ஈட்டி எறிதல் பயிற்சிக்காக சென்ற மாணவன் ஈட்டி குத்தி மைதானத்திலே உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க: Watch Video: நாளை மறுநாள் ஜி20 மாநாடு.. டிராக்டரில் ரோந்து பணியில் ஈடுபட்ட டெல்லி போலீஸ்..! நீங்களே பாருங்க..!


மேலும் படிக்க: A Raja Complaint: மதக்கலவரத்தை தூண்டுறீங்க.. முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மீது பறந்த புகார்