உத்திரப்பிரதேசத் தலைநகர் லக்னவ்வின் கைசர்பாக் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 82 வயது மூதாட்டி ஒருவர் தனது செல்ல நாயால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் மூலம் தெரியவந்துள்ளது.
போலீஸாரின் கூற்றுப்படி, ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியை சுசீலா திரிபாதி செவ்வாய்க்கிழமை காலை தனது வீட்டின் கூரையில் வாக்கிங்கில் இருந்தபோது அவரது செல்லப்பிராணி பிட் புல் அவரைத் தாக்கியுள்ளது.


அவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு வீட்டு உதவியாளர், இதுகுறித்து மகனுக்குத் தெரிவித்ததாகவும் அதை அடுத்து போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.


அந்தப் பெண் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர், அதைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது என்று அவர்கள் தெரிவித்தனர்.


அந்தப் பெண் தனது இளைய மகனுடன் வசித்து வந்துள்ளார். குடும்பத்தில் இரண்டு செல்ல நாய்கள் இருந்தன, அதில் பிட் புல் ரகம் அவரைத் தாக்கியுள்ளது.




கெய்சர்பாக் காவல் உதவி ஆணையர் யோகேஷ் குமார் கூறுகையில், "பெங்காலி தோலா பகுதியைச் சேர்ந்த 82 வயதான சுசீலா திரிபாதி அவரது செல்ல நாயால் தாக்கப்பட்டார். அவரது உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக லக்னோ மாநகராட்சி அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம். சம்பவம் குறித்து மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்கும்." என்றுள்ளார்.


முனிசிபல் கார்ப்பரேஷனின் ஒரு குழு புதன்கிழமை காலை திரிபாதியின் வீட்டிற்கு சென்றடைந்தது, ஆனால் அது பூட்டப்பட்டிருப்பதைக் கண்டது.


எல்எம்சியின் கால்நடை மருத்துவ அதிகாரி டாக்டர் அபினவ் வர்மா கூறுகையில், "பிட் புல் நாயை செல்லமாக வளர்ப்பதற்கான உரிமம் குடும்பத்தினருக்கு இருக்கிறதா என்று ஆய்வு செய்ய எங்கள் குழு வீட்டிற்குச் சென்றது. ஆனால் வீடு பூட்டி இருந்ததால் அதைக் கண்டறிய முடியவில்லை" என்றார்.


மேலும், நாய் எங்குள்ளது என்பது குறித்து தங்களுக்குத் தகவல் இல்லை என்றும், அது குறித்து மகனுக்குத் தெரிவிக்க முயற்சிப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


பிட் புல் நடுத்தர அளவிலான, குட்டையான பருமனான நாய், இது பயிற்சி பெறாதவர்களால் வீட்டில் செல்லப் பிராணியாக வளர்க்க முடியாத அளவுக்கு கொடூரமான இயல்புடையதாகக் கருதப்படுகிறது.


பொதுப் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இயற்றப்பட்ட UK's Dangerous Dogs Act, 1991 சட்டத்தின்படி இந்த பிட்புல் நாய்கள் 'சண்டைக்காக வளர்க்கப்படும் நாய்களில்' ஒன்றாகவும் இது பட்டியலிடப்பட்டுள்ளது.அதனால் பயிற்சி இல்லாதவர்கள் வீட்டில் செல்லப்பிராணியாக வளர்ப்பது சட்டத்தை மீறும் செயலாகும்.