உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த 2 மாதங்களாக 10 குழந்தைகள் உள்பட 11 பேரை கொன்றுகுவித்த ஓநாய்களில் ஒன்றை மட்டும் பிடிக்க முடியாமல் அம்மாநில வனத்துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர். 


தொடரும் ஓநாய் தாக்குதல்: காடுகள் அழிக்கப்படுவதால் பல்வேறு விளைவுகள் ஏற்படுகிறது. குறிப்பாக, வனம் சாராத செயல்களுக்காக வனப்பகுதியை பயன்படுத்தப்படுவது அங்கு வாழும் உயிரினங்களுக்கு பெரும் சிக்கலை தருகிறது.


வனப்பகுதி, விவசாய நிலமாக மாற்றப்படுவதாலும் அங்கு சாலைகள் கட்டப்படுவதாலும் அங்கு போதுமான உணவு, தண்ணீர் கிடைக்காமல், வனவிலங்குகள் மனிதர்கள் வாழும் பகுதிக்கு செல்வது தொடர் கதையாகி வருகிறது. இதனால், மனித - வனவிலங்கு மோதல் அதிகரித்து வருகிறது.


அதன் தொடர்ச்சியாக, உத்தரப் பிரதேசம் பஹ்ரைச் மாவட்ட மக்களை ஓநாய்கள் கூட்டம் அச்சுறுத்தி வருகிறது. கடந்த 2 மாதங்களில் ஓநாய் தாக்கியதில் 10 குழந்தைகள் மற்றும் ஒரு பெண் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், நேற்று, வீட்டில் தூங்கி கொண்டிருந்த 13 வயது சிறுவனை ஓநாய் தாக்கியுள்ளது.


மஹ்சி பகுதியில் உள்ள பிப்ரி மோகன் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு அர்மான் அலி என்ற சிறுவனை ஓநாய் தாக்கி இருக்கிறது. தாக்குதலின் போது சிறுவனின் கழுத்தில் காயம் ஏற்பட்டது. மேல், சிகிச்சைக்காக பஹ்ரைச்சில் உள்ள மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டுள்ளார்.


திணறும் வனத்துறை அதிகாரிகள்:


கடந்த ஞாயிற்றுக்கிழமை, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மஹ்சி தெஹ்சிலில் உள்ள சிசையா சுராமணி கிராமத்திற்குச் சென்று, அங்கு ஓநாய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்தார்.


இரங்கல் தெரிவித்ததோடு, மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுதியளித்தார். உத்தரப் பிரதேசத்தில் உள்ள 50 கிராமங்களை ஓநாய் கூட்டம் அச்சுறுத்தி வந்தது.


வனத்துறையினர் ஐந்து ஓநாய்களை பிடித்த நிலையில், ஒன்றை மட்டும் பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். ஓநாய் கூட்டத்தை பிடிக்க 'ஆபரேஷன் பேடியா' என்ற திட்டத்தை  உத்தரபிரதேச அரசு சமீபத்தில் தொடங்கியது. ஓநாயை பிடிக்க 165 வன அதிகாரிகளும், 18 துப்பாக்கி சுடும் வீரர்களும் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.


இதையும் படிக்க: Jani Master : பாலியல் வன்கொடுமை புகார்.. தேசிய விருதுபெற்ற ஜானி மாஸ்டர் மீது வழக்குப்பதிவு.. பரபர தகவல்கள்..