கொல்கத்தா ஆர். ஜி. கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு,  கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், அதை கண்டித்து போராட்டம் நடத்தி வரும் மருத்துவர்களை ஐந்தாவது முறையாக பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி.


விடாபிடியாக இருக்கும் மருத்துவர்கள்:


கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டம் நடத்தி வரும் மருத்துவர்கள், கடந்த செவ்வாய்க்கிழமை முதல் மாநில சுகாதாரத்துறை அலுவலகம் வெளியே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மருத்துவர்கள் தரப்பும் அரசு தரப்பும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.


பேச்சுவார்த்தையை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் உள்பட மருத்துவர்களின் பல கோரிக்கைகள் ஏற்கப்படாத காரணத்தால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்த வழக்கில் நீதி கிடைக்கும் வரை பணியில் சேர போவதில்லை என்றும் மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.


இந்த நிலையில், ஐந்தாவது மற்றும் கடைசியாக முறையாக மருத்துவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளதாக மேற்குவங்க அரசு தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி, உச்ச நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவுப்படி, மருத்துவர்கள் மீண்டும் பணியைத் தொடர வேண்டும் என்று தலைமைச் செயலர் மனோஜ் பந்த் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார்.


மீண்டும் இறங்கி வந்த மம்தா:


அதில், "முதலமைச்சருக்கும் உங்கள் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பிற்காக நாங்கள் உங்களை அணுகுவது இது ஐந்தாவது மற்றும் கடைசி முறையாகும். நேற்று முன்தினத்தில் இருந்து மேற்கொண்டு வரும் பேச்சுவார்த்தைக்கு இணங்க, மீண்டும் ஒருமுறை உங்களை முதலமைச்சர் காளிகாட் இல்லத்தில் திறந்த மனதுடன் கலந்துரையாட அழைக்கிறோம்.


நல்ல உணர்வு மேலோங்கும் என்று நாங்கள் நம்புகிறோம். மேலும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டபடி மற்றும் முந்தைய நாள் ஊடகங்களுக்கு நீங்கள் அளித்த அறிக்கையின்படி - இந்த விவகாரம் நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் உள்ளதால், சந்திப்பின் நேரடி ஒளிபரப்பு அல்லது வீடியோ எதுவும் எடுக்கக் கூடாது. மாறாக, கூட்டத்தில் என்ன நடந்தது என்பதை எழுத்துப்பூர்வமாக பதிவு செய்து கொள்ளலாம்.


இந்த சந்திப்பு இன்று மாலை 5 மணிக்கு, அதாவது செப்டம்பர் 16, 2024 அன்று, முதலமைச்சர் காளிகாட் இல்லத்தில் நடைபெற உள்ளது. கடந்த கலந்துரையாடலுக்கு வந்த அதே தூதுக்குழு இன்று மாலை 4:45 மணிக்கு நிகழ்விடத்திற்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. உங்கள் நேர்மறையான பதிலையும், பயனுள்ள விவாதத்தையும் எதிர்பார்க்கிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.