NEET Topper Suicide: நீட் தேர்வில் முதலிடம் பிடித்து இளநிலை மருத்துவ படிப்பை முடித்த நவ்தீப் சிங், தற்கொலை தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மருத்துவர் தற்கொலை:
மத்திய டெல்லியில் உள்ள மவுலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில், முதுநிலை மருத்துவம் பயின்று வந்த 25 வயது மாணவர் நேற்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்ச்யை ஏற்படுத்தியுள்ளது. நவ்தீப் சிங், இரண்டாம் ஆண்டு முதுநிலை மருத்துவ மாணவரும், கதிரியக்கவியல்-பிஜியில் பயிற்சி மருத்துவரும் ஆவார். இந்நிலையில், பார்சி அஞ்சுமன் விருந்தினர் மாளிகையில் உள்ள தனது அறையில் நவ்தீப் சிங் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
நடந்தது என்ன?
டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியின்படி, நவ்தீப்பின் தந்தை தனது மகன் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்காததால் கவலையடைந்து அவரை நேரில் பார்த்து வருமாறு நண்பரை அனுப்பியுள்ளார். கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருப்பதைக் கண்ட நண்பர், அதை உடைத்துத் திறந்து பார்த்தபோது, தூக்கில் தொங்கிய நிலையில் நவ்தீப்பின் சடலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக அந்த நபர் போலிசாருக்கு தகவல் தெரிவிக்க, தற்போது அவரது மரணம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
காவல்துறை சொல்வது என்ன?
நவ்தீப் ச்ங் அறையில் இருந்து தற்கொலை தொடர்பான குறிப்பு எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நவ்தீப் இறந்ததற்கான சரியான சூழ்நிலைகள் மற்றும் காரணம் குறித்து தெளிவாக விளக்கம் எதுவும் தற்போது வரை கிடைக்கவில்லை. நவ்தீப் மரணம் குறித்து தகவல் அல்லது விவரம் அறிந்தவர்கள் தாமாக முன் வந்து விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், நவ்தீபின் நண்பர்கள், சக மருத்துவர்கள் மற்றும் குடும்பத்தினரையும் போலீசார் நேரில் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீட் தேர்வில் முதலிடம் பிடித்த நவ்தீப் சிங்:
நவ்தீப் சிங் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து பலரது கவனத்தை ஈர்த்தார். அவர் டெல்லியில் உள்ள மவுலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில் தனது இளநிலை மருத்துவ படிப்பை முடித்துவிட்டு கதிரியக்கவியலில் தனது முதுநிலை மருத்துவ படிப்பை படித்துக் கொண்டிருந்தார்.
யார் இந்த நவ்தீப் சிங்:
பஞ்சாப் மாநிலம் முக்த்சார் மாவட்டத்தைச் சேர்ந்த நவ்தீப் சிங், 12ம் வகுப்பில் 88 சதவிகித மதிப்பெண்களை பெற்று இருந்தார். இவரது தந்தை, சரைநாகா கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நீட் தேர்வில் முதலிடம் பிடித்த போது, மவுலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியின் கட்டணக் கட்டமைப்பின் காரணமாக அதில் படிக்க விரும்புவதாக நவ்தீப் சிங் கூறியிருந்தார்.