வரும் ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்காக, மத்தியில் ஆட்சி நடத்தி வரும் பாஜக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  மேலும், அந்தந்த மாநில கட்சிகளும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேலையை துவங்கிவிட்டன. 


”இந்தியாவின் எதிர்காலத்தை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்”


இந்த நிலையில், இன்று தேசிய வாக்காளர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி பிரதமர் மோடி நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான இளம் வாக்களார்களுடன் கலந்துரையாடினார்.  நாடு முழுவதும் 5 ஆயிரம் இடங்களில் இருந்து லட்சக்கணக்கான இளைஞர்களுடன் பிரதமர் மோடி உரையாற்றினார்.


அப்போது பேசிய அவர், "இந்த நாளில், முதல்முறை வாக்காளர்களில் ஒருவராக இருப்பது எனக்கு ஆற்றலை ஏற்படுத்துகிறது.  நீங்கள் இப்போது ஜனநாயக நாட்டில் முக்கிய அங்கமாக உள்ளீர்கள். அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவின் எதிர்காலத்தை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். இளைஞர்களின் ஒவ்வொரு கனவையும் நினைவேற்ற பாஜக அரசு இரவு, பகலாக உழைத்து வருகிறது. எனது முன்னுரிமை அனைத்தும் இளைஞர்கள் தான். ” என்றார்.


"குடும்ப அரசியலுக்கு முற்றிப்புள்ளி வையுங்கள்”


தொடர்ந்து பேசிய அவர், "2047ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவைக் கட்டியெழுப்பும் பொறுப்பு உங்கள் அனைவருக்கும் உள்ளது. நாட்டில் பெரும்பான்மை அரசு இருக்கும்போது, ​​கொள்கைகள் மற்றும் முடிவுகளில் தெளிவு இருக்கும். உலகத் தலைவர்களைச் சந்திக்கும் போது, சந்திப்பது நான் மட்டும் அல்ல. என்னுடன் 140 கோடி இந்தியர்கள் இருக்கிறார்கள்.


பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த பிரச்னையை பாஜக அரசு தீர்த்து வைத்துள்ளது. மக்கள் ஊழல் பற்றி பேசுவதற்கு பதில் நம்பகத்தன்மை பற்றி பேசுகிறார்கள். பாஜக ஆட்சியில் மக்கள் ஊழல், மோசடி பற்றி பேசாமல்,  வெற்றி கதைகள் பற்றி பேசுகிறார்கள். பலவீனமான ஐந்து பொருளாதாரங்களின் பட்டியலில் இருந்த இந்தியா இன்று பெரிய பொருளாதாரமாக வளர்ந்துள்ளது.  வரும் ஆண்டுகளில், பொருளாதார பட்டியில் முதல் மூன்று இடங்களில் இந்தியா இருக்கும்.


 






மற்ற நாடுகளுக்கு நான் செல்லும்போது இந்தியாவை பெருமையாக நினைக்கிறார்கள். நாட்டில் குடும்பக் கட்சிகள் இருந்தால் இளைஞர்கள் முன்னேற வாய்ப்பிருக்காது. இளைஞர்களை முன்னேற விடாமல் தடுப்பதே உறவுமுறைகள் தான்.  குடும்பக் கட்சிகளின் சிந்தனை இளைஞர்களுக்கு எதிரானது.  அதனால் தான், உங்கள் (இளைஞர்கள்) வாக்குகளை வைத்து குடும்ப அரசியலுக்கு முற்றிப்புள்ளி வையுங்கள்” என்றார் பிரதமர் மோடி.




 


மேலும் படிக்க


BJP Election Campaign: ‘’மோடியின் உத்தரவாதம்: கனவுகளை நனவாக்குவோம்’’- லோக்சபா தேர்தலுக்கான பாஜகவின் முதல் பிரச்சாரப் பாடல் வெளியீடு!