பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா இன்று  பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான பாஜகவின் அதிகாரப்பூர்வ பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். 'இதனால்தான் மோடியை தேர்ந்தெடுகின்றனர்' (tabhi toh sab modi ko chunte hai) என்ற பிரச்சாரம் மக்களிடையே தோன்றி பாஜக அதனை ஏற்றுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த புதிய பிரச்சாரத்தின் கருப்பொருள், 'மோடியின் உத்தரவாதம்' (modi ki guarantee) என்பது ஆகும். முதல் முறை வாக்காளர் மாநாட்டில் (Nav Matdata Sammelan) இந்த பிரச்சாரம் தொடங்கப்பட்டது. அப்போது ​​பிரதமர் மோடி கோடிக்கணக்கான இந்தியர்களின் கனவுககளை எப்படி நனவாக்கினார் என்பதை விளக்கும் ஒரு பிரச்சார காணொளியும் வெளியிடப்பட்டது.





நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. அதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்காக அனைத்து கட்சி தரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜக இம்முறையில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று ஆயத்தமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் பாஜகவின் முதல் பிரச்சார பாடல் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா வெளியிட்டார். அப்போது, இந்த பிரச்சார முழக்கம் ஒரு சிலரின் உணர்வு மட்டுமல்ல, மக்களிடையே எதிரொலிக்கும் ஒன்று என தெரிவிக்கப்பட்டது. 


கட்சித் தொண்டர்கள் அனைவரும்  மக்களின் உணர்வுடன் தங்களை எதிரொலிக்க வேண்டும் என்றும், இந்த முக்கியமான பிரச்சாரத்தைப் பற்றிய விழிப்புணர்வை நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் பரப்ப வேண்டும் என்றும் நட்டா கேட்டுக் கொண்டார். 


தொடர்ந்து பேசிய அவர், “ பிரதமர் மோடி அரசாங்கத்தின் முயற்சியால் பல கோடி மக்களின் கனவுகள் நனவாக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் மத்தியில் வேலையில்லா நிலையை மாற்றி அமைத்துள்ளார். விவசாயிகள் தாங்கள் பயிரிடா பொருட்களை ஏற்றுமதி செய்ய அரசாங்கம் அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளது. அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர். வறுமைக்கோட்டுக்கு கீழ் இருந்த பல கோடி மக்கள் வெளியேறி முன்னேறியுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் வளமான இந்தியாவுக்கான நம்பிக்கை உள்ளது” என தெரிவித்துள்ளார்.