மணிப்பூரில் செயல்பட்டு வரும் மெய்ரா பைபிஸ் என்ற பெண்கள் அமைப்பு சட்டம் ஒழுங்கு பாதுகாப்புக்கு சவாலாக இருப்பதாக  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






மணிப்பூரில் சமூக அநீதிக்கு எதிராக போராடுவதற்கு பெண்கள் குழுக்கள் சுதந்திரத்திற்கு முன்னரே உருவாக்கப்பட்டது. அப்படி உருவாக்கப்பட்ட குழுக்களில் ஒன்று தான் மெய்ரா பைபிஸ் (தீபம் ஏந்தும் பெண்கள்) பெண்கள் குழு. சுதந்திரத்திற்கு முன் 50 முதல் 70 வயது பெண்கள் மட்டுமே மெய்ரா பைபிஸாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் 1947 ஆம் ஆண்டுக்கு பின் அனைத்து வயது பெண்களும் மெய்ரா பைபிஸ் குழுவில் இணைக்கப்பட்டனர். எப்போதெல்லாம் சமூக அநீதி நடைபெறுகிறதோ அப்போதெல்லாம் இந்த பெண்கள் களத்தில் இறங்கி போராடுவார்கள். ஒவ்வொரு குழுவிலும் 20 அல்லது அதற்கு அதிகமான பெண்கள் இடம்பெற்று இருப்பார்கள்.


மணிப்பூர் கலவரம் உலக அளவில் பேசப்படும் நிலையில், மணிப்பூரில் ராணுவத்தினர் செயல்பாடுகளுக்கு கடும் சவாலாக மெய்ரா பைபிஸ் இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் பாதுகாப்பு பணிகளுக்காக ராணுவ வாகனங்கள் செல்லும் போது அதனை வழிமறித்து அடையாள அட்டை கேட்பதாகவும், அவர்களை அகற்ற அழுத்தம் கொடுத்தால் உடனடியாக ஆடைகளை கழற்றுவோம் என மிரட்டுவதாகவும் தெரிவிக்கின்றனர்.


இந்த குழுவை சேர்ந்த பெண்கள் தடி, கம்புகளுடன் சாலைகளில் வளம் வருவதாகவும் ராணுவத்தினர், அதிகாரிகளை வழிமறித்து அட்டூழியம் செய்வதாக கூறுகின்றனர். பத்திரிக்கையாளர்களும் இதில் தப்பிக்கவில்லை, அவர்களையும் மறித்து அடையாள அட்டை எங்கே என கேட்பதாகவும் கூறுகின்றனர். மெய்ரா பைபிஸ் குழுவை சேர்ந்த பெண்கள் 5 பேர், இம்பால் பகுதியில் நாகா இன பெண் ஒருவரின் கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோல தடை செய்யப்பட்ட பயங்கரவாத கும்பலை சேர்ந்த 12 பேரை போலீசாரிடம் இருந்து மீட்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. இப்படி தினந்தோறும் நடைபெறும் சம்பவங்களால் அதிகாரிகள் செய்வதறியாது உள்ளனர்.


தற்போதைய நிலையில், மூன்று CRPF மகிளா நிறுவனங்கள் மற்றும் மகிளா படைப்பிரிவுகளுடன் RAF (rapid action force) இன் பத்து நிறுவனங்கள், மொத்தம் 375 பணியாளர்கள் உள்ளனர். இருப்பினும், நூற்றுக்கணக்கான மெய்ரா பைபிஸை எதிர்கொள்ள போதுமானதாக இல்லை என்று அதிகாரிகள் கருதுகின்றனர். அஸ்ஸாம் ரைபிள்ஸில் தற்போது குறைந்த அளவிலான பெண் பணியாளர்கள் உள்ளதாகவும், மேலும் சட்டம்-ஒழுங்கு சூழ்நிலைகளை கையாள்வதில் அவர்களுக்கு போதிய பயிற்சி இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை சரி செய்ய , அதிக பெண்கள் பட்டாலியன்களை சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்துள்ளனர்.