உலகம் முழுவதும் 2020-ஆம் ஆண்டு பரவத்தொடங்கிய கொரோனா தொற்றின் தாக்கம் இன்னும் முடிந்தபாடில்லை என்றே சொல்லலாம். குறிப்பாக இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக, தினமும் 2 லட்சத்திற்கு அதிகமானோர் பாதிப்படைந்து வருகின்றனர். இந்த பதற்றமான சூழலைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்பதால்தான் கடுமையான ஊரடங்கும் பல்வேறு மாநிலங்களில் அமலில் உள்ளது. இருந்தபோதும் கொரோனா தொற்றின் முதல் அலையினை விட இரண்டாவது அலையின் பாதிப்பு மற்றும் இறப்பின் விகிதம் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது.




கொரோனா தொற்றின் 3-வது அலை குழந்தைகளைத் தாக்கும் எனவும் அதனை சமாளிப்பதற்கும், கட்டுப்படுத்தவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தேசிய குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துவருகின்றனர். ஆனால் மூன்றாவது அலை ஏற்பட்டால் அதில் குழந்தைகளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் எனக் கூறுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். மேலும் முதலாவது, இரண்டாவது அலைகளில் குழந்தைகள் எப்போதும் போல பாதுகாக்கப்பட்டுள்ளனர். அதையும் மீறி தொற்று ஏற்பட்டவர்களுக்கும் லேசான அளவிலேயே பாதிப்பு இருக்கிறது என்றார்.


ஆனால் குழந்தைகளுக்கு லேசான அளவில் பாதிப்பு ஏற்பட்டாலும்,  கொரோனா தொற்றிற்கு பிந்தைய (post-covid complications) பாதிப்புகளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக வரவிருக்கும் நாட்களில் Multisystem inflammatory syndrome in children (MIS-C) எனப்படும் அழற்சி நோய் பாதிப்பு லேசான பாதிப்பு ஏற்பட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. அதில் எரிச்சல் மற்றும் கண் மற்றும் வாய் புண்களுடன் ஐந்து நாட்களுக்கு குழந்தைக்கு அதிக காய்ச்சல் மற்றும் சொறி போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர். 




இதனை ஆரம்பத்தில் கண்டுபிடித்து  மருத்துவரிடம் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிடில் அடுத்த கட்டமாக இருதய பிரச்சனைகளுக்கு முன்னேறக்கூடிய நிலை ஏற்படும் என கூறப்படுகிறது. ஏனெனில் இதயத்திலிருந்து இரத்த ஓட்டம் குறைவாக இருப்பதாலும், இதயத்திற்கு இரத்த நாளங்கள் பாதிக்கப்படுவதாலும் வாழ்நாள் முழுவதும் சிக்கல்கள் ஏற்படுகின்றன என்று குழந்தை நல மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.


இதே அறிகுறியோடு தான் கடந்த வாரத்தில் புனேவில் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டதாக பாரதி வித்யாபீத் மருத்துவத்தின் துணை மருத்துவ இயக்குநரும் குழந்தை மருத்துவத்தின் பேராசிரியருமான ஜிதேந்திர ஓஸ்வால் கூறியுள்ளார். மேலும் கொரொனா தொற்று குழந்தைகளை பாதிக்கிறது என்பதற்கான எவ்வித சான்றுகளும் இல்லை என தெரிவிக்கப்பட்டாலும், இதுப்போன்ற பல்வேறு பாதிப்புகள் குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. 


எனவே எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. குறிப்பாக கொரோனா குழந்தைகள் அல்லது பெரியவர்களைப் பாதிக்கிறதா ? என்பதற்கான சான்றுகள் இல்லை. எனவே வரும் நாட்களில் எவ்வித பாதிப்பும் குழந்தைகளுக்கு ஏற்படாத வண்ணம் கூடுதல் கவனம் செலுத்தி பாதுகாத்துக்கொள்வதற்கு நாம் தயாராகிக்கொள்ள வேண்டும் எனவும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.