புதிய வேளாண் சட்டங்களை ரத்துசெய்யக் கோரி, டெல்லியில் ஆறு மாதங்களாக விவசாயிகள் கூட்டமைப்பினர் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்தப் போராட்டத்தின் மூலம் கொரோனா ஆபத்து உருவாகியுள்ளதாகக் கூறி, டெல்லி, அரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநில அரசுகளுக்கு தேசிய மனிதவுரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.



விவசாயிகள் நடத்திவரும் போராட்டமானது நாளை 26ஆம் தேதியுடன் ஆறாவது மாதத்தை நிறைவுசெய்கிறது. இதையொட்டி போராட்டக் கூட்டமைப்பான கிசான் சம்யுக்த மோர்ச்சா இன்றைய தினத்தை கருப்பு நாளாகக் கடைப்பிடிப்பதாக அறிவித்துள்ளது. தங்களின் கருப்பு நாள் போராட்டத்துக்கு ஆதரவாக பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும் வாகனங்களிலும் கருப்புக்கொடியைக் கட்டி எதிர்ப்பைத் தெரிவிக்கவேண்டும் என்றும் கிசான் மோர்ச்சா வேண்டுகோள் விடுத்துள்ளது.




இந்த நிலையில், தேசிய மனிதவுரிமை ஆணையத்துக்கு ஒருவர் புகார் மனு அனுப்பியுள்ளதாகவும் அதில், விவசாயிகளின் போராட்டம் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறும்வகையில் இருக்கிறது என முறையிட்டிருப்பதாகவும் ஆணையத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மத்திய அரசு மட்டுமின்றி மனிதவுரிமை ஆணையமும் விதித்துள்ள பாதுகாப்பு விதிகளை மீறும்வகையில், போராடும் விவசாயிகள் பெரிய அளவில் கூடுகின்றனர்; நாளுக்கு நாள் விவசாயிகளின் போராட்டக் களத்தில் நிலைமை மோசமாகிவருகிறது; இதன் மூலம் அவர்களின் உயிருக்கு ஆபத்து மட்டுமல்ல, ஊரகப் பகுதிகளுக்கும் கொரோனா கிருமியைப் பரப்பும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளதை, மனிதவுரிமை ஆணையம் கணக்கில் எடுத்துக்கொள்கிறது. இதன் அடிப்படையில் போராட்டப் பகுதிகள் உள்ள டெல்லி தேசியத் தலைநகரப் பிரதேசம் மற்றும் அரியானா, உத்தரப்பிரதேச மாநிலங்களின் தலைமைச்செயலாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதன்படி, போராட்டக் களங்களில் கொரோனா பரவலைத் தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது குறித்து நான்கு வாரங்களுக்குள் அவர்கள் மனிதவுரிமை ஆணையத்துக்கு அறிக்கையைத் தாக்கல்செய்யவேண்டும்.




”கொரோனா இரண்டாவது அலைக் காலகட்டத்தில், நாடு இதுவரை இல்லாத மிக மோசமான சூழலை எதிர்கொண்டிருக்கிறது. மூன்று லட்சம் மனித உயிர்கள் இதனால் பறிக்கப்பட்டுள்ளன. மேலும் நாட்டின் பல பகுதிகளில் கொரோனா தொற்று அதிவேகமாகப் பரவி கடுமையான பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. போதிய வசதி இல்லாமல் மக்களின் உயிர்களைக் காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் அனைத்து முயற்சிகளிலும் முனைப்பாக ஈடுபட்டுவருகின்றன. கொடிய கோரோனா தொற்றை எதிர்த்துநிற்பதற்காக கட்டுப்பாட்டு நெறிமுறைகள், அதிக தொற்று ஏற்படும் பகுதிகளைக் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக அறிவிப்பது, பொதுமுடக்கம் ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ஆனாலும் இப்போது கரும்பூஞ்சை, வெண்பூஞ்சை ஆகிய புதிய பாதிப்புகளும் உருவாகிவருகின்றன. இப்படியான அசாதாரணமான சூழலில் மனித உயிர்களைப் பாதுகாப்பதே ஒட்டுமொத்த நோக்கமாக இருக்கிறது.” என்றும் தேசிய மனிதவுரிமை ஆணையம் தன் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.


ஆணையத்தில் முறையிட்டவர் தன் மனுவில், ” போராட்டத்தை முன்னிட்டு இதுவரை 300 விவசாயிகள் கொரோனா உள்பட பல காரணங்களால் இறந்துள்ளனர். கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு கரும்பூஞ்சைத் தாக்குதலும் அதிகரித்தபடி இருக்கிறது. மே 26 அன்று விவசாயிகள் கருப்பு நாள் என அறிவித்து போராட்டங்களை அறிவித்துள்ளதால், நிலைமை மிகவும் மோசமாகப் போகும் ஆபத்து உள்ளது. எனவே, தேசிய மனிதவுரிமை ஆணையம் இதில் தலையிடவேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.