நாடாளுமன்ற மக்களவை தேர்தல், அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு இந்திய தேர்தல் ஆணையத்தால் இந்த வாரத்தில் வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது.
பிரதமர் மோடி போட்டியிடும் 2ஆவது தொகுதி எது?
அந்த வகையில், தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே, முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக சமீபத்தில் வெளியிட்டது.
முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் 195 மக்களவை தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 110 எம்பிக்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில், பல சர்ச்சைக்குரிய சிட்டிங் எம்பிக்களுக்கு வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது.
வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியும் லக்னோ தொகுதியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் அமேதி தொகுதியில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியும் மீண்டும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், பாஜகவின் மத்திய தேர்தல் குழு கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு கூடுகிறது. இந்த கூட்டத்தில், பாஜக இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் குறித்து ஆலோசிக்கப்படும் என கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது. குறிப்பாக, 150 தொகுதிகளில் வேட்பாளர்களின் வெற்றிவாய்ப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டு, அதை தொடர்ந்து இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
பாஜகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல்:
இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் தென் மாநிலங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் குறிப்பாக, தென் மாநிலங்களில் ஒரு தொகுதியில் பிரதமர் மோடியை போட்டியிட வைப்பது குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக பாஜக கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட உள்ளதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அது பற்றி எந்த உறுதிப்படுத்தப்பட்ட தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தமிழ்நாட்டில் பாஜக தொண்டர்களை உற்சாகப்படுத்த அவர் போட்டியிட போவதாக கூறப்பட்டது.
தமிழ்நாட்டில் அவர் போட்டியிடவில்லை என்றால் குஜராத் மாநிலம் வதோதராவில் போட்டியிடலாம் என கூறப்படுகிறது. சொந்த மாநிலம் என்பதாலும் ஏற்கனவே போட்டியிட்ட தொகுதி என்பதாலும் அதில் போட்டியிட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு, வாரணாசி, வதோதரா ஆகிய 2 தொகுதிகளில் பிரதமர் மோடி போட்டியிட்டார்.
தேர்தலில் இரண்டு தொகுதிகளில் வென்றாலும் பிரதமரான பிறகு, வதோதரா மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். கடந்த 2019ஆம் ஆண்டு, வாரணாசி தொகுதியில் மட்டுமே அவர் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த முறையை போன்று, இந்த முறையும் அவர் ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.