Smriti Irani: பெளத்த மத மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.225 கோடி செலவிலான, 38 திட்டங்களுக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அடிக்கல் நாட்டினார்.
புத்த மேம்பாட்டுத் திட்டம்:
மத்திய சிறுபான்மை விவகாரங்கள் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர், ஸ்மிருதி இரானி நேற்று பௌத்த சமூகத்தின் வளர்ச்சிக்காக ரூ.225 கோடி மதிப்பிலான 38 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த திட்டங்கள் பிரதான் மந்திரி ஜன் விகாஸ் காரியக்ராமின் கீழ் செயல்படுத்தப்படுகின்றன. பௌத்த சிறுபான்மையினரின் மேம்பாடு மற்றும் செழிப்புக்காக புத்த மேம்பாட்டுத் திட்டத்தை அரசு அர்ப்பணித்துள்ளது என்று அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறினார். இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் மற்றும் யூனியன் பிரதேசமான லடாக் ஆகிய இடங்களில் புத்த மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், குறிப்பிட்ட வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது.
புத்த மத திட்டத்தின் கீழான திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா
பௌத்த ஆய்வு நிறுவனத்தை வலுப்படுத்த 30 கோடி ரூபாய்:
மத்திய அரசாங்கத்தின் 'பாரம்பரியத்துடன் வளர்ச்சி' மற்றும் 'பாரம்பரியத்தை மதிப்பது' என்ற கருத்துக்கு இணங்க, சிறுபான்மை விவகார அமைச்சர் ஸ்மிருதி இரானி டெல்லி பல்கலைக்கழகத்தில் உள்ள மத்திய பௌத்த ஆய்வு நிறுவனத்தை (CIBS) வலுப்படுத்த 30 கோடி ரூபாய் நிதியுதவியை அறிவித்தார். இந்த மையம் கல்வித்துறை ஒத்துழைப்பு, ஆராய்ச்சியை மேம்படுத்துதல், பௌத்த சமய மக்களின் மொழியைப் பாதுகாத்தல் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
'பௌத்த கலாச்சார பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டும்'
நிகழ்ச்சியில் பேசிய ஸ்மிருதி இரானி, ”'வளர்ந்த இந்தியா' என்ற நோக்கத்திற்கு ஏற்ப, பௌத்த கலாச்சார பாரம்பரியத்தையும் அறிவையும் பாதுகாக்க, ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு CIBS மற்றும் பிற முக்கிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என வலியுறுத்தினார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பங்கேற்ற நிலையில், பல்வேறு வடகிழக்கு மாநிலங்களில் இருந்து மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர், தங்களது பகுதிகளில் இருந்து காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டு விழாவில் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி
மாநில வாரியான திட்டங்கள்:
புத்த மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.225 கோடி செலவிலான, 38 திட்டங்களுக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அடிக்கல் நாட்டினார். அதன்படி மாநில வாரியாக, புத்த மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அருணாச்சலப் பிரதேசத்துக்கு ரூ.41 கோடி மதிப்பிலான 10 திட்டங்களும், சிக்கிமிற்கு ரூ.43 கோடியே 98 லட்சம் மதிப்பிலான 10 திட்டங்களும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. இம்முயற்சியின் கீழ், இமாச்சலப் பிரதேசத்திற்கு ரூ.25 கோடியே 45 லட்சம் செலவில் 11 திட்டங்களும், உத்தரகாண்டிற்கு ரூ.15 கோடியே 14 லட்சம் செலவில் 3 திட்டங்களும், லடாக்கிற்கு ரூ.14 கோடியே 50 லட்சம் செலவில் 2 திட்டங்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.