மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் கட்டுக்குள் வராததை தொடர்ந்து விரைவில் அங்கு,  குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.


“கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மணிப்பூரில் தொடர்ந்து வரும் கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100-ஐ கடந்துள்ளது. வன்முறையை நிறுத்தாதவர்கள் யாராயினும் அதற்கான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார் முதலமைச்சர் பிரைன் சிங்”


மணிப்பூரின் நில-அமைப்பு:


வெறும் 35 லட்சம் பேரை மக்கள் தொகையை கொண்ட வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில்,  மெய்தி மற்றும் குக்கி சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகமானோர்.  முழுக்கவும் சமவெளிப் பகுதிகளில் வசிப்பவர்கள் மெய்தி . ஆட்சியிலும் அதிகாரத்திலும் இவர்களின் கொடியே அங்கு பறக்கிறது. மணிப்பூரின் புவியமைப்பை பொறுத்தளவில், சமவெளியின் பங்கு குறைவாகவும், மலைப்பாங்கு அதிகமாகவும் கொண்டுள்ளது. மலைப்பாங்கு நெடுக, குக்கி மற்றும் நாகர் பழங்குடியின மக்களே வசிக்கின்றனர். 32 உட்பிரிவுகளைக் கொண்ட குக்கி சமூக மக்கள் மெய்தி இனத்தவர் அளவுக்கு முன்னேற வாய்ப்பின்றி பின்தங்கியே உள்ளனர். 


கலவரத்தின் தொடக்கப்புள்ளி:


மக்கள் தொகையில் அதிகமுள்ள மெய்தி இனத்தவர், குடியிருப்பின் கூடுதல் தேவைக்காக சமவெளிக்கு அப்பால் மலைநிலங்களும் தேவை என்பதை உணர்ந்தனர். ஆனால், வன நிலங்களை உரிமை கோருவதில் பழங்குடியினத்தவருக்கு ஆதரவாகவே சட்டம் இருந்தது. அடுத்தபடியாக, குக்கி இனத்தின் தற்காலத் தலைமுறையில் கணிசமானோர் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் படித்து, மணிப்பூருக்கு வெளியே வாழ்க்கையில் உயர ஆரம்பித்தனர். இதுவும் மெய்தி இனத்தவர் கண்களை உறுத்தியது. எனவே, தங்களையும் பட்டியல் இனத்தில் சேர்க்க வேண்டும் என கோர ஆரம்பித்தனர்.


வெடித்த கலவரம்:


மெய்தி மக்களின் பட்டியலின உரிமைக்கு, குக்கி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கெனவே சகலத்தையும் ஆக்கிரமித்து முன்னேறி இருக்கும் மெய்தி மக்கள், பழங்குடி பட்டியலுக்குள் வந்தால் தாங்கள் மேலும் நொடித்துப் போவோம் என பயந்தனர் குக்கி மக்கள். இதையடுத்து குக்கி இனத்தவரை உள்ளடக்கிய, அனைத்து பழங்குடியின மாணவர் சங்கத்தின் ‘ஆதிவாசி ஏக்தா மார்ச்’ என்ற அமைப்பினர் நடத்திய பேரணியின்போது வன்முறை வெடித்தது. அதன் பிறகான கலவர நெருப்பு காட்டுத்தீயாக எவர் பிடிக்கும் அகப்படாது மணிப்பூரை புரட்டிப்போட்டது.


100 பேர் பலி:


ஒருவரை தாக்கிக்கொள்வது, வாகனங்களை இடைமறித்து தீயிட்டுக் கொளுத்துவது, வீடுகளில் பெட்ரோல் குண்டுகளை வீசுவது என வன்முறை தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குழந்தைகள், பெண்கள் என 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.   37 ஆயிரம் மக்கள் உயிர் பயத்துடன் வீடுவாசல் இழந்து இடம்பெயர்ந்துள்ளனர். ராணுவம் குவிக்கப்பட்டு திசையெங்கும் வேட்டுச் சத்தம் எதிரொலித்து வருகிறது. பெயரளவில் மட்டுமே பிரேன் சிங் முதல்வராக அமர்ந்திருக்க, அங்கே அறிவிக்கப்படாத குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.  குற்றம்சாட்டுவதிலும் உண்மை உண்டு.


அரசின் முயற்சிகள் தோல்வி:


கலவரத்தை அடக்க மாநில அரசு எடுத்த அத்தனை முயற்சிகளும் தோல்வியையே சந்தித்தன. உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரடியாக மணிப்பூருக்கே சென்று ஆய்வு செய்தாலும், அதனால் எந்த பலனும் இல்லை. இந்நிலையில், கலவரக்காரர்களின் தாக்குதலில்  ராணுவ அதிகாரி ஒருவர் நேற்று காயமடைந்தார். இதையடுத்து, வன்முறையை நிறுத்துங்கள், இல்லாவிட்டால் அதற்கான பின்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் பிரைன் சிங் எச்சரித்துள்ளார்.


குடியரசு தலைவர் ஆட்சியா?


ஒரு மாதத்திற்கும் மேலாக தொடரும் கலவரத்தை அடக்க முடியாதது மாநில அரசின் பெரும் தோல்வியாகவே கருத முடிகிறது. இந்த சாதிய ரீதிய மோதலானது அண்டை மாநிலமான மிசோரமில் வசிக்கும், மெய்தி மற்றும் குக்கி இன மக்களிடையேயும் பரவத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தான், மணிப்பூரில் விரைவில் குடியரசு தலவர் ஆட்சி அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியலமைப்பின் XVIII பகுதி அவசரகால விதிகள் பற்றி பேசுகிறது.


சட்டம் சொல்வது என்ன?


சட்டப்பிரிவு 352(1)-ன்படி "போர் அல்லது வெளிப்புற ஆக்கிரமிப்பு அல்லது ஆயுதக் கிளர்ச்சியால் இந்தியாவின் அல்லது அதன் பிரதேசத்தின் ஏதேனும் ஒரு பகுதியின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் கடுமையான அவசரநிலை நிலவுகிறது என்று குடியரசுத் தலைவர் உணர்ந்தால் அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படலாம்.  பிரிவு 356-ன்படி மாநிலங்களில் அரசியலமைப்பு இயந்திரம் தோல்வியுற்றால், பிரிவு 355-ன்படி அரசியலமைப்பின் விதிகளின்படி மாநில அரசாங்கத்தை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும்.