சிக்கிம் மாநிலத்தில் சிக்கிய 300 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் பத்திரமான இடத்திற்கு மீட்கப்பட்டனர். 


வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேற்கு சிக்கிம் மற்றும் கியால்ஷிங் மாவட்டங்களில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. அங்கு மீட்பு பணிகள தீவிரமாக நடைபெற்று வருகிறது.  இந்திய ராணுவ வீரர்கள் - ஸ்டிரைக்கிங் லயன் பிரிவு, திரிசக்தி கார்ப்ஸின் பிரிவினர் வடக்கு சிக்கிமில் சுங்தாங்கில்  சிக்கிய 300 க்கும் அதிகமான சுற்றுலா பயணிகளை பத்திரமாக மீட்க தற்காலிகமாக புதிய பாலத்தை அமைத்து  வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உணவு, தங்குவதற்கான இடம் மற்றும் மருத்துவா வசதிகளும் செய்து தரப்பட்டது.






வானிலை மாற்றங்களால் ஏற்பட்ட கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக சிக்கிம் மாநிலத்தில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளது. மீட்பு பணிகள் மற்றும் சீரமைப்பு பணிகள் வேகமாக நடந்து வருவதாகவும் இதனால் புதிதாக வரும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி  வழங்கப்படாது என்றும்  வடக்கு சிக்கிம் மாவட்ட ஆட்சியர் (டிசி) ஹேம் குமார் செத்ரி தெரிவித்துள்ளார்.  






மேலும் பேரிடர் மேலாண்மை குழுவினர், மீட்பு குழுவினர் மற்றும் அனைத்து பிரிவினருக்கு நன்றி தெரிவித்து கொண்டார். அதுமட்டுமின்றி சுமார் 3200 சுற்றுலா பயணிகள் மீட்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.  இதில் 36 பேர்  சர்வதேச சுற்றுலா பயணிகளும், 60 பேர் மாணவர்களும்  ஆவர். அவசர உதவிகளுக்காக  8509822997 மற்றும் 8116464265 ஆகிய எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.