திருமணத்திற்கு பின்பு உடலுறவை மறுப்பது இந்து திருமணச் சட்டத்தின் கீழ் குற்றமாகலாம், ஆனால் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் குற்றமாகாது என கர்நாடகா உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
புதுமண தம்பதியினரிடையே பிரச்னை:
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு கடந்த 2019ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து தேன் நிலவு செல்வோம் என எதிர்பார்த்து இருந்த அந்த பெண்ணுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஏனென்றால், திருமணமான 30 நாட்களிலேயே அவரது கணவர் ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணம் முடிந்து வீடு திரும்பிய பிறகும் இயல்பாக இல்லாத கணவர், மனைவியுடன் உடலுறவு கொள்ள மறுத்துள்ளார். அதோடு, கடவுளை பிரார்த்திக்கவும், வழிபாடு நடத்தவும், ஆன்மீக சொற்பொழிவுகளை பார்க்கும்படியும் வற்புறுத்தி தொல்லை கொடுத்துள்ளார். அதோடு, திருமணம் என்பது உடலுறவைப் பற்றியது அல்ல எனவும், மனதோடு மனம் இணைவதும் எனவும் பேசியுள்ளார்.
விவாகரத்து கோரிய மனைவி:
தொடர்ந்து, கணவர் ஆன்மீகம் தொடர்பாகவே பேச, அந்த பெண் தனது கணவரின் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். அதோடு, கணவரின் செயல்பாட்டால் ஏற்பட்ட மன உளைச்சல் குறித்து, அந்த பெண் கணவன் மீது காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். கணவரிடமிருந்து விவாகரத்து வேண்டும் எனவும் குடும்பநல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். ஆனால், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, விவாகரத்து கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார்.
வழக்கு விசாரணை:
மனுவில், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 498A மற்றும் வரதட்சணை தடைச் சட்டம், 1961 இன் கீழ் கணவருக்கு எதிராக கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கை நீதிபதி நாகபிரசன்னா விசாரித்தார்.
விவாகரத்து வழங்கிய நீதிமன்றம்:
வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்தாண்டு நவம்பர் மாதம் 22ம் தேதி வழக்கை தொடர்ந்த பெண்ணுக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது. அதைதொடர்ந்து தனது முன்னாள் கணவர் மீது குற்றவியல் நடவடிக்கையை தொடர்ந்தார்.
அதிரடி தீர்ப்பு:
கணவரால் திருமணத்தில் உடலுறவு மறுப்பது குற்றமாகும். ஆனால் இந்து திருமணச் சட்டம்-1955 இன் கீழ் மட்டுமே குற்றமாகும். இந்திய தண்டனைச் சட்டம் 498A பிரிவின் கீழ் அது குற்றம் அல்ல. எதிர்மனுதாரர் தனது மனைவியுடன் உடல் உறவில் ஈடுபட விரும்பவில்லை, இது சந்தேகத்திற்கு இடமின்றி இந்து திருமணச் சட்டத்தின் 12(1)(a) பிரிவின் கீழ் திருமணத்தை முடிக்காததால் கொடுமையாகிவிடும், ஆனால் அது 498A பிரிவின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ள கொடுமையின் கீழ் வராது” என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், சட்டச் செயல்முறையை தவறாகப் பயன்படுத்துவதால் இந்த வழக்கில் குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடர அனுமதிக்க முடியாது என்றும் கர்நாடக உயர்நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது.