Bhabanipur Election Result 2021: மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தார். இருப்பினும், அவர் முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். 6 மாதங்களுக்குள் எம்.எல்.ஏ ஆனால்தான் முதல்வராக தொடர வேண்டும் என்பதால், மம்தா பானர்ஜி போட்டியிட வசதியாக அவரது சொந்த தொகுதியான பபானிபூரில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ. ராஜினாமா செய்தார். அதையடுத்து, பபானிபூர் மற்றும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்ட சாம்சர்கஞ்ச், ஜங்கிபூர் ஆகிய தொகுதிகளுக்கு கடந்த இரு தினங்களுக்கு முன் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. 






 


பபானிபூர் உள்ளிட்ட 3 தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி 3 அடுக்கு பலத்த பாதுகாப்புடன் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்தலில் பதிவான ஓட்டுகள் 21 சுற்றுகளாக எண்ணப்பட உள்ளன. இன்று மாலைக்குள் முடிவு எதிர்பார்க்கப்படுகிறது. மம்தா பானர்ஜி போட்டியிடும் தொகுதி என்பதால் பபானிபூர் இடைத்தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. பபானிபூரில் முதல் 3 சுற்றுக்கள் நிலவரப்படி மம்தா பானர்ஜி, பாஜகவின் பிரியங்கா டிப்ரேவாலை விட 4,600-வாக்குகள் முன்னிலையில் உள்ளார். பவானிபூர் இடைத்தேர்தலில் வென்றால் மட்டுமே முதலமைச்சராக மம்தா பானர்ஜி நீடிக்க முடியும் என்ற நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.