வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும்- மு.க.ஸ்டாலின்:


 "அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் கடமை எங்களுக்கு உள்ளது. அதனை படிப்படியாக நிறைவேற்றுவோம். இது சாமானிய மக்களுக்காக நடத்தப்படும் ஆட்சி" என பாப்பாபட்டி கிராமத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார். 


ஆட்கொல்லி புலியை சுட்டு பிடிப்பதில் சிக்கல்:


மசினகுடியில் ஆட்கொல்லி புலியின் நடமாட்டம் உள்ள அதே இடத்தில் வேறு 4 புலிகளின் நடமாட்டம் உள்ளதால் வனத்துறையினர் குழப்பம் அடைந்துள்ளனர். புலிவேட்டைக்காக மசினகுடி-கூடலூர் சாலையில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தம்  செய்யபப்பட்டுள்ளது. 


வீரபாண்டி ஆ.ராஜா காலமானார்:


முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் இளைய மகன் வீரபாண்டி ஆ.ராஜா மாரடைப்பின் காரணமாக தனது பிறந்தநாளிலேயே மரணமடைந்தார்.


ரூ.100ஐ கடந்த பெட்ரோல் விலை:


சென்னையில் பெட்ரோல் விலை மீண்டும் 100 ரூபாயை கடந்த விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டுநர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


லடாக் எல்லையில் ராணுவத் தளபதி திடீர் ஆய்வு:


லடாக் எல்லையில் சீனா ராணுவத்தை குவித்து வருவதாக இந்தியா குற்றம்சாட்டியுள்ளது. எனவே சீனாவின் நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் எல்லையில் படைகளை நிலை நிறுத்தியுள்ளது. லடாக் பகுதியில் ராணுவத்தை அனுப்ப சீனா உள்கட்டமைப்பை உருவாக்குகிறது என்று ராணுவ தலைமை தளபதி கூறியுள்ளார்.


தங்கம் விலை அதிரடி உயர்வு:


நேற்று 34,944 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 152 ரூபாய் உயர்ந்து 35,096 ரூபாய்க்கு விற்பனையாகிறது.


ஆளில்லா கடை பாபநாசத்தில் திறப்பு:


வாழ்க்கையில் எல்லோரும் நேர்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக, காந்தி பிறந்தநாளில் பாபநாசத்தில் ஆளில்லா கடை இன்று ஒரு நாள் மட்டும் திறக்கப்பட்டது.


பிரிகிறோம்! நடிகர் நாக சைதன்யா - சமந்தா தம்பதி அறிவிப்பு:


நடிகை சமந்தா மற்றும் அவரது கணவர் நாக சைதன்யா ஆகியோர் ஒத்த மனத்துடன் இருவரும் ஒருவரை ஒருவர் பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். நாகார்ஜுனா குடும்பம் சமந்தாவுக்கு 200 கோடி ரூபாய் வரை ஜூவனாம்சாகத் தர முன்வந்த நிலையில் அதனை வேண்டாம் என மறுத்துவிட்டார் சமந்தா. 


உ.பி. அரசின் விளம்பர தூதரானார் நடிகை கங்கனா ரணாவத்:


உத்தரப் பிரதேச அரசின் 'ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு' திட்டத்தின் விளம்பர தூதராக நடிகை கங்கனா ரனாவத் நியமிக்கப்பட்டுள்ளார்.


ஜல்ஜீவன் திட்டத்திற்கான ஆப்பினை தொடங்கி வைத்தார் மோடி:


ஜல் ஜீவன் திட்ட பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் கலந்துரையாடினார். கிராமங்களில் வீடுகளுக்குக் குழாய் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் ஆப்பினையும் துவக்கி வைத்தார்.


லோக் ஜனசக்தியின் தேர்தல் சின்னம் முடக்கம்:


கட்சிக்குள் இருந்த மோதல் போக்கின் காரணமாக மறைந்த ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியின் தேர்தல் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் முடக்கி உள்ளது.


டெல்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு:


வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக டெல்டா மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


தமிழகத்துக்கு உலக வங்கி சார்பில் ரூ.1,100 கோடி கடன் உதவி: 


சென்னையை உலகத் தரம் வாய்ந்த நகரமாக மாற்றும் திட்டத்துக்கு உலக வங்கி 150 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் வழங்கியுள்ளது. 


வான்பரப்பில் சீனாவின் 38 படை விமானங்கள் ஊடுருவல் : தைவான் புகார்


தங்கள் வான் பாதுகாப்பு மண்டலத்தில்,  சீனாவின் 38 படை விமானங்கள் அத்துமீறிப் பறந்ததாகத் தைவான் கூறியுள்ளது. இதுவரை சீனா மேற்கொண்டவற்றிலேயே மிகப்பெரிய ஊடுவல் இது என்றும் குறிப்பிட்டுள்ளது தைவான்.


மும்பை இந்தியன்ஸ் தோல்வி


மும்பை இந்தியன்ஸ் அணியை டெல்லி கேபிடல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன்மூலம், மும்பை இந்தியன்ஸ் அணியின் ப்ளே ஆப் சுற்று கனவு கேள்விக்குறியாகியுள்ளது.