கடந்த 9 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், 2014ஆம் ஆண்டுக்கு பிறகு பாஜக அசுர வளர்ச்சி அடைந்துள்ளதால், அதை ஒன்றிணைந்து எதிர்க்க எதிர்க்கட்சி தலைவர்கள் வியூகம் அமைத்து வருகின்றனர்.


எதிர்க்கட்சிகளுக்கு பின்னடைவை தந்த மகாராஷ்டிரா அரசியல் நகர்வு:


அதன் முதல் முயற்சியாக பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில், பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எதிர்க்கட்சிகள், இப்படி, அதிரடியாக செயல்பட்டு வரும் நிலையில், அதில் பலத்த பின்னடைவு ஏற்படும் விதமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது.


எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதில் முக்கிய பங்கு வகித்து வருபவர் சரத் பவார். அரசியல் சாணக்கியராக கருதப்படும் இவரால்தான் சாதிக்க முடியாத ஒன்றை எதிர்க்கட்சிகள் சாதித்தது. மகாராஷ்டிராவில் எதிரெதிர் துருவங்களாக கருதப்பட்ட காங்கிரஸையும் சிவசேனாவையும் இணைத்து கூட்டணி ஆட்சி நடத்தினார்.


ஆனால், தற்போது, இவருடைய கட்சியே இரண்டாக உடைக்கப்பட்டிருப்பது தேசிய அளவில் எதிர்க்கட்சிகளுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பும், சரத் பவாரின் கட்சி இரண்டாக உடைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த சூழலில், சரத் பவாருக்கு நேர்ந்துள்ள அரசியல் நெருக்கடி தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.


குறிப்பாக, உத்தர பிரதேசத்திற்கு அடுத்தபடியாக அதிக மக்களவை உறுப்பினர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பும் மாநிலம் என்பதால், தற்போது நடந்திருக்கும் அரசியல் மாற்றம் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மகாராஷ்டிராவில் அடுத்து என்ன..?


ஆனால், சரத் பவார், அடுத்து என்ன செய்ய போகிறார் என்பதுதான் அனைவரின் கேள்வியாக உள்ளது. பாஜக கூட்டணியில் இணைந்த தன்னுடைய கட்சி எம்எல்ஏக்களை அவர் பதவி நீக்கம் செய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து உத்தவ் தாக்கரே சிவசேனாவின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத் கூறுகையில், "நான் சரத் பவாருடன் இப்போதுதான் பேசினேன். 


'நான் வலிமையானவன். எங்களுக்கு மக்கள் ஆதரவு உள்ளது. உத்தவ் தாக்கரேவுடன் இணைந்து மீண்டும் அனைத்தையும் உருவாக்குவோம்' என அவர் கூறினார். ஆம், இந்த விளையாட்டை மக்கள் நீண்ட காலம் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்" என்றார்.


இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் மகேஷ் தபசே கூறுகையில், "அஜித் பவாரின் நடவடிக்கைக்கு சரத் பவாரின் ஆசி கிடைக்கவில்லை. பாஜகவின் ஆபரேஷன் லோட்டஸின் ஒரு பகுதியாக இன்று பதவியேற்பு விழா நடந்துள்ளது. அனைத்து தலைவர்கள், தொண்டர்கள், மாவட்ட தலைவர்கள் மற்றும் முன்னணி அமைப்புகள் சரத் பவாருடன் உள்ளனர். பதவியேற்பு விழாவை அதிகாரப்பூர்வமாக கட்சி ஆதரிக்கவில்லை" என்றார்.