தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்.சி.பி) அஜித் பவார், மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக இன்று பதிவியேற்றார். தற்போது, மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறது. இந்த சூழலில், எதிர்க்கட்சியாக உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அஜித் பவார், கட்சியை உடைத்து பாஜக - சிவசேனா கூட்டணியில் இணைந்துள்ளார்.


இரண்டாக உடைகிறதா தேசியவாத காங்கிரஸ்..?


இந்த நிலையில், கட்சியில் பிளவு இல்லை என்றும் ஒட்டு மொத்த கட்சியும் மகாராஷ்டிர அரசுடன் இருப்பதாகவும் அஜித் பவார் கூறியுள்ளார். பதவியேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த ஒன்பது ஆண்டுகளாக நாட்டை முன்னேற்ற முயற்சித்து வருவதாக நம்புவதால் பாஜக மற்றும் சிவசேனா தலைமையிலான அரசில் இணைந்துள்ளேன்.


இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தில் போட்டியிடுவேன். கடந்த இரண்டரை வருடங்களில் நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, ​​வளர்ச்சியில் கவனம் செலுத்துவோம் என்று முடிவு செய்தோம். நிறைய பேர் நம்மை விமர்சிக்க முயற்சிப்பார்கள். அவர்களுக்கு பதில் சொல்லாமல், மாநிலத்தை எப்படி கொண்டு செல்வது என்பதில் கவனம் செலுத்துவோம்" என்றார்.


அமைச்சரவை விரிவாக்கம் குறித்து பேசிய அவர், "பெரும்பான்மையான என்சிபி எம்எல்ஏக்கள் மற்றும் ஒட்டுமொத்த கட்சியும் ஆட்சியில் இருக்க முடிவு செய்துள்ளது. என்சிபி கட்சியே அரசாங்கத்தில் இணைந்துள்ளது. நாட்டிலும், மாநிலத்திலும் என்ன நடந்தாலும், அதைப் பார்த்து, வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். மேலும் அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும். அப்போது, மற்றவர்கள் அமைச்சர்களாகவும் ஆக்கப்படுவார்கள்" என்றார்.


பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்?


சமீபத்தில், நாகாலாந்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 7 சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைத்தனர். இதை குறிப்பிட்டு பேசிய அஜித் பவார், "மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, உத்தவ் தாக்கரே தலைமையில் எம்.வி.ஏ அரசாங்கத்தை அமைத்தோம். 


சிவசேனாவுடன் செல்லலாம் என்றால், பாஜகவுடன் செல்ல முடியாதா? நாகாலாந்தில் இதைச் செய்ய முடிந்தால், மகாராஷ்டிராவிலும் நம் மக்களின் வளர்ச்சிக்காகச் செய்ய முடியாதா?" என்றார்.


அஜித் பவாருடன், சரத் பவாருக்கு நெருக்கமானவராக கருதப்படும் திலீப் வால்ஸ்-பாட்டீல், மூத்த தலைவர்கள் சாகன் புஜ்பால், ஹசன் முஷ்ரிப்  உள்ளிட்டோர் மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகையில் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.


சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்து வந்த அஜித் பவாருக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 30க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே, அஜித் பவார் உள்பட அக்கட்சியை சேர்ந்த 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். சட்டப்பேரவையில் அக்கட்சிக்கு 53 எம்எல்ஏக்கள் உள்ளனர்.