மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் கமல்நாத், அவரது மகன் எம்.பி. நகுல்நாத் பா.ஜ.க.-வில் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில், நகுல்நாத் தனது சமூக வலைதளங்களில் இருந்து காங்கிரஸ் கட்சியின் பெயர், லோகோ நீக்கப்பட்டுள்ளது தகவலை உறுதிப்படுத்தும்படியாக உள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தின் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி கடும் தோல்வியை சந்தித்தது. தேர்தல் தோல்விக்கு காரணம் கமல்நாத் என்று அம்மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்தனர். ஏனெனில், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய முகமாக இருப்பவர் கமல்நாத். தேர்தல் தோல்வியால் கமல்நாத் மீது கட்சிக்கு அதிருப்தி இருப்பதுடன் அவர்களிடையேயான தொடர்பு அவ்வளவு சரியாக இல்லை என தெரிவிக்கப்பட்டது.
பா.ஜ.க.-வில் இணைகிறாரா?
கமல்நாத் சிந்த்வாரா லோக்சபா தொகுதியில் 9 முறை போட்டியிட்டு வென்றிருக்கிறார். அவர் தீவிர அரசியல் பயணத்தை தொடங்கியதில் இருந்தே காங்கிரஸ் கட்சியின் முகமாக இருக்கிறார். மத்திய அமைச்சராக இருந்தவர். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்பு வகித்திருக்கிறார். இப்படியான நிலையில், கமல்நாத் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. கமல்நாத் சிந்த்வாராவில் செல்லவிருந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கமல்நாத் தனது மகனுடன் புது டெல்லி செல்ல இருப்பதாக தெரிகிறது. போபாலில் உள்ள கமல்நாத் அங்கிருந்து டெல்லி செல்ல இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, நகுல்நாத் தனது சமூக வலைதள பக்கத்தில் இருந்து ‘காங்கிரஸ் எம்.பி.’ என்பதை நீக்கியுள்ளதை பா.ஜ.க.-வில் இணைய உள்ளதை உறுதிப்படுத்தும்படியாக அமைந்துள்ளது.
நகுல்நாத் எக்ஸ் தளத்தில் காங்கிரஸ் லோகோ நீக்கம்
சிந்த்வாரா தொகுதி எம்.பி. நகுல்நாத் தனது எக்ஸ், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்டவற்றில் காங்கிரஸ் கட்சியின் லோகோ, காங்கிரஸ் எம்.பி. என்பதை நீக்கியிருப்பது பரபரப்பை அதிகரித்துள்ளது. கமல்நாத், நகுல் நாத் இருவரும் டெல்லி சென்று இன்று மாலை பா.ஜ.க.வில் இணைவது உறுதி என்று கமல்நாத்தின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கமல்நாத் பற்றி திக்விஜய் சிங்?
காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கிடம் கமல்நாத் பா.ஜ.க.-வில் இணைவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, ”எல்லாம் சரியாகிவிட்டது. நேற்றிரவு கமல்நாத்துடன் பேசினேன். அவர் சிந்த்வாராவில் இருக்கிறார். அவர் பா.ஜ.க.வில் இணைவதாக செய்தி வருகிறது. நேரு - காந்தி குடும்பத்தின் காலத்திலிலேயே காங்கிரஸ் கட்சியில் இணைந்தவர். அப்படிப்பட்டவர் காங்கிரஸில் இருந்து அவர் வெளியேறுவார் என்று எதிர்பார்க்க முடியாது.” என்று தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 19-ம் தேதி பா.ஜ.க.-வில் இணையலாம்!
கமல்நாத் உடன் நெருக்கமான நட்பில் உள்ள எம்.எல்.ஏ.க்களிடமிருந்து கிடைத்த தகவலின் படி, பிப்ரவரி 19 ஆம் தேதி நகுல்நாத்துடன், கமல்நாத் பாஜகவில் சேரலாம் என்று தெரிவித்துள்ளனர். அவர்களுடன் 10 முதல் 12 எம்.எல்.ஏக்கள், கட்சியிலுள்ள மாநில தலைவர்கள் மற்றும் ஒரு மேயர் ஆகியோரும் காங்கிரஸை விட்டு வெளியேறி பாஜகவில் சேரலாம். . பிப்ரவரி 18-ம் தேதி வரை சிந்த்வாரா சுற்றுப்பயணம் நடைபெற இருந்த நிலையில், கமல்நாத் அதை பாதியில் விட்டுவிட்டு டெல்லி சென்றுள்ளதால் அவர் பா.ஜ.க.வில் இணையுள்ளதை உறுதி செய்வதாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
1980 முதல் 2014 வரை லோக்சபா எம்.பி.யாக இருந்த கமல்நாத். 9 முறை எம்.பி., தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். 2018 ல்- மத்திய பிரதேச முதலமைச்சரானார். ஆனால், அவரது ஆட்சிக்காலம் முடிவதற்குள் அரசு கவிழ்ந்தது. அதேசமயம், நகுல்நாத் . 2019 மக்களவைத் தேர்தலில் சிந்த்வாரா தொகுதியில் வெற்றி பெற்றார். நாட்டில் பொதுத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் முகமாக இருந்தவராக பா.ஜ.க.வில் இணைந்தால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.