புதுச்சேரியில் முந்தைய நாராயணசாமி அரசை கவிழ்த்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்களில் ஜான்குமார் முக்கியமானவர். சட்டசபை தேர்தலின் போது பாஜகவில் இணைந்தார். ஜான்குமார், அவரது மகன் விவிலின் ரிச்சர்ஸ் ஆகியோர் தேர்தலில் போட்டியிட்டு வென்றனர். காமராஜ் நகர் தொகுதியில் ஜான்குமார், நெல்லித்தோப்பு தொகுதியில் மகன் விவிலின் ரிச்சர்ஸ் வெற்றி பெற்றனர். புதுச்சேரி தேர்தலில் வென்ற என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி அரசு அமைத்துள்ளது. பாஜகவுக்கு 2 அமைச்சர்கள் பதவியும் சபாநாயகர் பதவியும் மட்டுமே தரப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துவிட்டார். இதனால் புதுவையில் பாஜக எம்.எல்.ஏக்கள், 2 அமைச்சர் பதவிகளுக்காக முட்டி மோதினர்.




புதுச்சேரியில் அரசு அமைந்து 45 நாட்களைக் கடந்தும் அமைச்சரவை அமையவில்லை. இதற்கிடையே கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜகவைச் சேர்ந்த ஜான்குமார் அமைச்சர் பதவிக்கு முயன்று வருகிறார். ‘அவருக்கு பதவி வழங்கப்படாது’ என்ற தகவல்கள் வந்தன. இந்நிலையில், நேற்று அவரது ஆதரவாளர்கள், புதுவையின் பாஜக தலைமை அலுவலகத்திற்கு சென்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கட்சி பேனரை கிழித்து எறிந்தனர்.




இந்த விவகாரம் தொடர்பாக காமராஜ் நகர் பாஜக எம்எல்ஏ ஜான்குமார் கூறும்போது, "நானும் (காம்ராஜ் நகர்), எனது மகனும் (நெல்லித்தோப்பு) வெற்றி பெற்றிருப்பதால் கண்டிப்பாக ஒரு அமைச்சர் பதவி உறுதி என்று ஒரு மாதத்துக்கு முன்பாகவே கூறியிருந்தனர். சிறுபான்மையினத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் நானும் இருந்தேன். 4 நாட்களுக்கு முன்பும் அதனை உறுதி செய்தனர். நானும் ஊடகங்களில் விளம்பரம் கொடுத்து விட்டு, கோயில்களில் பூஜைக்கு ஏற்பாடு செய்து விட்டேன். இது அனைத்து தொகுதிகளிலும் பிரபலமாகிவிட்டது. ஆனால் கடைசி நேரத்தில், ஊசுடு தொகுதி எம்எல்ஏ சாய் சரவணகுமாருக்கு ஓராண்டு அமைச்சர் பதவி கொடுத்து விட்டு, மீதமுள்ள 4 ஆண்டுகள் அமைச்சர் பதவியில் இருங்கள் என்று கூறினார்கள். எனக்கு 6 மாதங்கள் அமைச்சர் பதவி கொடுங்கள். அதன் பிறகு நானே ராஜினாமா கடிதம் கொடுத்து விடுகிறேன் என்றேன்.




என்.ஆர்.காங்கிரஸில் இருந்திருந்தால் நிச்சயமாக அமைச்சராகியிருப்பேன். ஆனால், அங்கு இருந்திருந்தால் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியில் நடந்ததுபோல் தான் நடந்திருக்கும். எனக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்ற கோபத்தில் தான் எனது ஆதரவாளர்கள் எங்கள் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டார்கள். மாநிலத்தின் நன்மைக்காக கட்சிக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும்” என்று தெரிவித்தார். இது தொடர்பாக புதுவை பாஜக நிர்வாகிகளிடம் பேசியபோது, இதற்கு காரணமே முதல்வர் ரங்கசாமியின் ஜாதக நம்பிக்கைதான். தன் கட்சிக்காரர்கள், பாஜகவினர் என அமைச்சராக வாய்ப்புள்ளவர்களின் ஜாதகங்களை பார்த்து கொண்டிருக்கிறார் ரங்கசாமி. அதில் ஜான்குமார் ஜாதகம் சரியில்லை என கூறியிருக்கிறார். இதனால் டெல்லி மேலிடமும் ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி தரவில்லை என்கின்றனர்.