நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில்  58,615 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது, கடந்த 74 நாட்களில்  பதிவு செய்யப்பட மிகக் குறைவான தினசரி பாதிப்பாகும். இதையடுத்து, 12-வது நாளாக அன்றாட புதிய பாதிப்புகள் 1 லட்சத்திற்கும் கீழ் பதிவாகியுள்ளது. மேலும், 81 நாட்களுக்குப் பிறகு தினசரி கொரோனா பாதிப்பு முதன் முறையாக 60 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. மேலும், புதிய பாதிப்புகளை விட தினசரி குணமடைவோரின் எண்ணிக்கை அதிகிரிக்கும் போக்கும் தொடர்ந்து காணப்படுகிறது. தொடர்ந்து 38-வது நாளாக, புதிய பாதிப்புகளை விட அதிகமானோர் குணமடைந்து வருகின்றனர். இதன் காரணமாக, கொரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெறுவோரின் (Active Cases) எண்ணிக்கையும் சரிந்து வருகிறது. 


தற்போது, நாட்டில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 7,24,352 ஆகக் குறைந்துள்ளது. கடந்த மே 9ம் தேதி இந்தியாவில் 37 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்தனர். 


சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைவதால், மருத்துவ உள்கட்டமைப்பு வசதியை மேலும் வலுப்படுத்தி, கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் போன்ற அதிக ஆபத்துள்ள கொரோனா நோயாளிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்த முடியும். இதன், மூலம் வரும் நாட்களில் கொரோனா இறப்புகளை கணிசமான முறையில் குறைக்க முடியும். நாடு முழுவதும், கடந்த ஒரு வாரத்தில் 4.4 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதாவது, தினசரி சராசரி தொற்று எண்ணிக்கை 63,000 ஆக இருந்தது. கடந்த மே 11 அன்று பாதிப்பு எண்ணிக்கை 22 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தது.  சராசரியாக, தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்புகளை இந்தியா பதிவு செய்தது.       




 


கொரோனா இறப்பு எண்ணிக்கை:  


கடந்த 7 நாட்களில் 16,333 பேர் கொரோனா நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். அதாவது, சராசரியாக 2300 பேர் கொரோனா தொற்றால் இறந்து வருகின்றனர். கடந்த மே 23ம் தேதி இந்தியாவின் வருடாந்திர இறப்பு எண்ணிக்கை 29,330 ஆக இருந்தது. தினசரி சராசரி இறப்பு எண்ணிக்கை 4,000க்கும் அதிகம். இந்தியாவில் இதுநாள் வரை, 3,86,741 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.  கடந்த 24 மணி நேரத்தில் 1574 பேர் மரணமடைந்தனர். இது, 60 நாட்களில் மிகக்குறைவான தினசரி கொரோனா இறப்பு எண்ணிக்கையாகும். உலகளவில், 40 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதில் 50 விழுக்காடு கொரோனா இறப்புகள் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், ரஷியா ஆகிய ஐந்து நாடுகளில் ஏற்பட்டுள்ளது. 


ஒரு வார காலத்தில் அதிகமான உயிர்களை பறிகொடுத்த நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 6 லட்சத்துக்கும் அதிமான இறப்புகளை பதிவு செய்த அமெரிக்காவின் அதிபட்ச வாராந்திர இறப்பு எண்ணிக்கை 24,023 ஆகும். இந்தியாவின், மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை அமெரிக்காவை விட குறைவாக இருந்தாலும், மிகக் குறுகிய நாட்களில் அதிகமான இறப்புகளை இந்தியா பதிவு செய்துள்ளது. மறுபுறம், கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக  அமெரிக்காவின் இறப்பு எண்ணிக்கை ஏற்றம் இறக்கமாக காணப்படுகிறது.