சீனாவைச் சார்ந்து வாழும் நிலை அதிகரித்தால் நிச்சயம் இந்தியா அந்நாட்டிடம் தலை வணங்க வேண்டியிருக்கும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் 75-வது சுதந்திர தின இந்தியா முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்நாளில் தான் மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பள்ளி ஒன்றில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தேசியக்கொடியை ஏற்றினார். அதனைத்தொடர்ந்து பேசிய அவர், ”நமது நாடு எப்போது சுயசார்பு மிக்க நாடாக இருக்கிறதோ? அந்த அளவுக்கு பாதுகாப்பான நாடாக இருக்கும் என கூறினார். மேலும் அந்த விழாவில் பேசிய அவர், ”நாம் தற்போது இணையம் மற்றும் தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இதற்காக மற்ற நாடுகளைத்தான் பெரும்பாலும் சார்ந்திருக்க நேரிடுகிறது. குறிப்பாக சீனாவின் பொருள்களை நாம் புறக்கணிக்க நிலைத்தாலும், நாம் பயன்படுத்தக்கூடிய மொபைல்கள் உள்பட பெரும்பான்மையான பொருள்கள் சீனாவிலிருந்துதான் வருகிறது. எனவே இதுபோன்ற நேரங்களில் நாம் சுயசார்புடன் இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
குறிப்பாக நாம் எப்போதும் கூறுவது போல சுதேசி என்றால் மற்ற வெளிநாட்டுப்பொருள்களை புறக்கணிப்பது மட்டும் அல்ல. நாம் சர்வதேச வர்த்தகத்தினை நீட்டிக்க வேண்டும் என்று தெரிவித்தார். அதற்காக நாம் சுயசார்புடன் இருக்க வேண்டும் என்று கூறினார்.
”மேலும் பொருளாதாரப் பாதுகாப்பினைச்சேர்ந்த பல்வேறு உற்பத்தியினை நாம் அதிகரிக்க வேண்டும். குறிப்பாக சிறந்த தரமான பொருள்களை உற்பத்தி செய்வதோடு, உற்பத்தி அனைத்தையும் கிராமப்புறங்களில் தான் இருக்க வேண்டும் என்பதனை உறுதிப்படுத்தவேண்டும். இதோடு அரசாங்கம் நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையானவற்றைத் தயாரிக்கவும், தொழில்களை ஊக்குவிப்பதற்கானக் கொள்கைகளை வகுக்கவும் தொழில்களை முறையிடும் மற்றும் வலியுறுத்தும் வகையில் இருக்கவேண்டும் என்று அவர் கூறினார். மேலும் நாங்கள் முழுமையான தேசியமயமாக்கலை நம்பவில்லை, ஆனால் தேசத்துக்கும் தொழில்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதும் உண்மை இல்லை. இவை அனைத்தும் ஒரு குடும்பமாக இணைந்து செயல்பட வேண்டும்” எனவும் கூறியுள்ளார்.
”குறிப்பாக இந்தியாவில் சிறு குறு தொழில்களை ஊக்குவிப்பதில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் எனவும், நமது தேசம் சுயசார்பு மிக்கதாக இருக்க வேண்டும். எந்த அளவு சுய சார்பு மிக்க நாடாக இருக்கிறதோ அந்த அளவு பாதுகாப்பான நாடாக இருக்கும். எவ்வளவு சம்பாதிக்கிறமோ அதை வைத்து வாழ்க்கையின் தரத்தை நிர்ணயம் செய்யக் கூடாது. எவ்வளவு திருப்பி அளிக்கிறோமோ அதை வைத்தே நிர்ணயம் செய்யவேண்டும். இவைதான் வேலைவாய்ப்பை மற்றும் சுய வேலை வாய்ப்பை உருவாக்கும். மேலும் நமது சுதந்திர போராட்ட வீரர்களை இந்த நாளில் நினைவுகூர வேண்டும்” என்றும் மோகன் பகவத் பேசியுள்ளார்.