கணவனின் அலுவலகத்திற்கு சென்று மனைவி அவரை அவமதிப்பது இரக்கமற்ற செயலுக்கு சமம் என சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நபர் ஒருவருக்கு விவாகரத்து வழங்கி ராய்ப்பூர் குடும்ப நல நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
நீதிபதிகள் கௌதம் பாதுரி மற்றும் ராதாகிஷன் அகர்வால் ஆகியோர் அடங்கிய அமர்வு, குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து பெண் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான வழக்கில் தீர்ப்பை வழங்கி உள்ளது. அரசு அலுவலரான தனது கணவரை பணியிட மாற்றம் செய்யக்கோரி மனைவி அமைச்சரிடம் புகார் அளித்துள்ளார்.
எந்த ஆதாரமும் இன்றி, சக பெண் ஊழியருடன் கணவர் தகாத உறவில் ஈடுபட்டிருப்பதாகக் கூறுவது இரக்கமற்ற செயலுக்கு சமம் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. ஆகஸ்ட் 18 அன்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
தம்தாரி மாவட்டத்தில் வசிக்கும் 32 வயது நபர், விதவையான 34 வயது ராய்பூரைச் சேர்ந்த பெண்ணை 2010இல் திருமணம் செய்து கொண்டார். பின்னர், அந்த நபர் பல்வேறு காரணங்களைக் கூறி விவாகரத்து கோரி ராய்பூர் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தன்னை துன்புறுத்துவதாகவும் அவரது பெற்றோரையும் மற்ற குடும்ப உறுப்பினர்களையும் சந்திக்க விடாமல் தடுப்பதாகவும் அந்த பெண்ணின் மீது அவர் குற்றம்சாட்டி உள்ளார்.
டிசம்பர் 2019இல், பதிவுகளில் உள்ள உண்மைகள் மற்றும் ஆதாரங்களை மதிப்பீடு செய்த பிறகு, கணவரின் விண்ணப்பத்தை அனுமதித்து, அதன் மூலம் அவருக்கு விவாகரத்து ஆணையை குடும்ப நல நீதிமன்றம் வழங்கியது. இதையடுத்து, அந்த முடிவை எதிர்த்து அந்த பெண் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
உயர் நீதிமன்ற விசாரணையின் போது, பெண்ணின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஷிஷிர் ஸ்ரீவஸ்தவா, மனைவி தனது கணவரால் கொடூரமாக நடத்தப்பட்டதை கருத்தில் கொள்ள குடும்ப நல நீதிமன்றம் தவறிவிட்டது. கணவன் பொய்யான ஆதாரங்களை உருவாக்கி விவாகரத்து பெற முயல்வதாகவும் கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உயர்நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என்றும் மனைவி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், "எனவே, சாட்சியங்களின் ஒட்டுமொத்த மதிப்பீட்டின்படி, மனைவி கணவனை அற்ப விஷயங்களுக்காக துன்புறுத்தியது தெரிய வந்துள்ளது. இது குறித்து கணவர் பலமுறை புகார் அளித்துள்ளார். இது சாட்சிகளின் வாக்குமூலங்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது தீவிர குற்றம் அல்ல. போலீசார் அதை கண்டு கொள்ளவில்லை. உடல்ரீதியாக துன்புறுத்தியதாக புகார் அளிக்கப்பட்டதோடு, அசிங்கமாகவும் மோசமாகவும் நடந்தது குறித்து கணவர் போலீசில் புகார் செய்தார் என்பது உண்மைதான்.
திருமணத்திற்குப் புறம்பாக ஒரு பெண்ணுடன் கணவன் தகாத உறவில் ஈடுபட்டதாக அந்த பெண் பொய் குற்றச்சாட்டை முன்வைத்திருப்பதை ஆண் மற்றும் அவரது மனைவியின் சகோதரியின் வாக்குமூலத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. தகாத உறவு புகாரின் பேரில் கணவரை அலுவலகத்தில் இருந்து பணியிட மாற்றம் செய்யுமாறு மனைவி முதலமைச்சரிடம் புகார் அளித்துள்ளார்.
எனவே, குடும்ப நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு மற்றும் உத்தரவில் எந்த தடையும் விதிக்க தேவையில்லை. மேலும் குடும்ப நீதிமன்றத்தால் கண்டறியப்பட்ட முடிவை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்" என தெரிவித்தது.