காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் அக்கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் போட்டியிட திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும், இதில் அவர் இறுதி முடிவை எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. அவர் இன்னும் அதற்கு தயாராகவில்லை என்றும் ஆனால், விரைவில் இதுகுறித்து முடுவு எடுப்பார் என்றும் விவரம் அறிந்தவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர். 


உள்கட்சி தேர்தலில் போட்டியிடுவாரா? என்பதற்கு அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார். மலையாள நாளிதழான மாத்ருபூமியில் அவர் எழுதிய கட்டுரையில், சுதந்திரமாகவும் நியாயமாகவும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். மேலும், தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டிய காங்கிரஸ் காரிய கமிட்டியில் உள்ள 12 உறுப்பினர்களுக்கும் தேர்தல் அறிவித்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.


"இந்த முக்கிய பதவிகளில் இருந்து கட்சியை யார் வழிநடத்துவது என்பதை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மற்றும் மாநில காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகள் தீர்மானிக்க அனுமதிப்பது, உள்வரும் தலைவர்களின் தொகுப்பை சட்டப்பூர்வமாக்கவும், கட்சியை வழிநடத்த நம்பகமான அதிகாரத்தை அவர்களுக்கு வழங்க உதவியாக அமையும். இருப்பினும், புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது என்பது காங்கிரஸுக்கு மிகவும் தேவைப்படும் மறுமலர்ச்சிக்கான தொடக்கமாகும்.


தேர்தல் நடத்துவதால் பிற பயன்களும் இருக்கிறது. எடுத்துக்காட்டாக, பிரிட்டன் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவிக்கான போட்டியின் போது உலகளாவிய ஆர்வத்தை நாம் கண்டோம். 2019 ஆம் ஆண்டில் தெரசா மேக்கு பதிலாக ஒரு டஜன் வேட்பாளர்கள் போட்டியிட்டபோது, ​​​​போரிஸ் ஜான்சன் முதலிடம் பிடித்ததை நாம் ஏற்கனவே கண்டோம்.


காங்கிரஸுக்கு இதேபோன்ற சூழ்நிலையைப் பிரதிபலிப்பது, அதேபோன்று கட்சியின் மீதான தேசிய ஆர்வத்தை அதிகரிக்கும். அதிக வாக்காளர்களை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஈர்க்கும். இந்த காரணத்திற்காக, பல வேட்பாளர்கள் தங்களை பரிசீலிக்க முன்வருவார்கள் என்று நம்புகிறேன். கட்சி மற்றும் நாட்டிற்கான் அவர்களின் பார்வைகளை முன்வைப்பது நிச்சயமாக பொதுமக்களின் ஆர்வத்தைத் தூண்டும்.


காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் அக்டோபர் 17 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் இதுபோன்ற ஜனநாயகப் வழிமுறையை பின்பற்றும் ஒரே கட்சி தாங்கள் தான் என காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது. அக்டோபர் 19ம் தேதி, உள்கட்சி தேர்தல் முடிவு அறிவிக்கப்படும்.


தேர்தலுக்கான அறிவிப்பு செப்டம்பர் 22ஆம் தேதி வெளியிடப்படும் என்றும், வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 24ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 30ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தியை மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்க பல மூத்த தலைவர்கள் அறிவுறுத்தியபோதிலும், அவர் தேர்தலில் போட்டியிட மறுத்துவிட்டார்.


இச்சூழலில், நேரு குடும்பத்திற்கு நெருக்கமான ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.