யமுனை ஆற்றில் அம்மோனியா அளவு அதிகரித்த போதிலும், சத் பூஜையை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் அங்கு புனிதநீராடி வருகின்றனர். சூரிய பகவானை வணங்கும் விதமாக சத் பூஜையை கொண்டாடப்படுகிறது.
இப்பண்டிகை பொதுவாக பீகார், சார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் காணப்படுகிறது. கடுமையான வழிபாடு விதிகளைக் கொண்ட இவ்விழா நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. நீர்நிலைகளில் (கங்கை எனக் கருதி) புனித நீராடுவது, உண்ணா நோன்பிருப்பது போன்ற முக்கிய கூறுகளை இது உள்ளடக்கியது.
யமுனா ஆற்றில் நுரை: கடந்த நான்கு நாட்களாக யமுனை ஆற்றில் நுரைகள் (foam)காணப்படுகிறது. நுரைகள் ஆறு மாசுபட்டிருப்பதை வெளிப்படுத்துகின்றன. சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் ஆற்றில் திறந்து விடப்படுவது, தற்போது உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படாமல் இருப்பது, யமுனை ஆற்றங்கரையில் உள்ள தொழிற்சாலைகளின் கழிவுநீர் சுத்திகரிப்புநிலையங்கள் முறையாக செயல்படாமல் இருப்பது போன்றவற்றால் ஆற்றில் நுரை ஏற்படும். மேலூம், ஆற்றில் உள்ள அம்மோனியா அளவு அதிகரிக்கும். கடந்த ஆண்டும் இதே போன்ற நுரைகள் யமுனை ஆற்றில் காணப்பட்டது. தொழிற்சாலைகளின் கழிவு நீர் முறையாக சுத்திகரிக்கப்படாமல் யமுனை ஆற்றில் கலப்பதால், பாஸ்பரஸ் அளவு பல மடங்கு அதிகரித்து நுரை ஏற்படுவது கண்டறியப்பட்டது.
இந்நிலையில், தில்லி குடிநீர் வாரியப் பணியாளர் ஒருவர் யமுனை ஆற்றில் உள்ள நுரைகளை அகற்றும் விதமாக தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்கருத்தை பதிவு செய்துவருகின்றனர்.
சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் எதுவும் வடிகால்களில் திறந்து விடாமல் இருப்பது, கழிவு நீர் சுத்திகரிப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றுவது,கழிவு நீரை சுத்திகரிக்காத தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுப்பது, யமுனை ஆற்றுப் படுக்கைகளில் மணல் அள்ளுவதை தடுப்பது போன்ற ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.
நமாமி கங்கே திட்டத்தின் கீழ், மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களுடன் இணைந்து கங்கை நதியின் நீர் தரத்தை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் கண்காணித்து வருகிறது. யமுனா நதியை பொருத்தவரை, ரூ 4355 கோடி மதிப்பிலான 24 திட்டங்களுக்கு நமாமி கங்கே திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய ஜல் சக்தி அமைச்சர் முன்னதாக தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்