இரண்டு சக்கர வாடகை வண்டிகள் வழங்கும் ரேபிடோ (Rapido)வலை நிறுவனம் தொடர்பான விளம்பரத்தில் தெலுங்கானா போக்குவரத்து கழகத்தை மிகவும் அவமதிக்கும் வகையில் நடிகர் அல்லு அர்ஜூன் பேசிய கருத்து சர்ச்சைகுள்ளாகியுள்ளது.   


மாறிவரும், இந்திய டிஜிட்டல் பொருளாதார சூழலில், குறுகிய கால ஒப்பந்த மற்றும் ப்ரீலேன்சிங் வேலைவாய்ப்புகளை அடிப்படையாகக் கொண்டு கிக் பொருளாதார (Gig Economy) செயல்பாடுகள் அதிகரித்துள்ளது. ஓலா, ஸ்விகி, சோமொட்டோ, உபர், ரேபிட்டோ, அமேசான் போன்ற சேவை வலை  நிறுவனங்கள் இதில் கோலோச்சி வருகின்றன.        


இந்நிலையில், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன்,   இரண்டு சக்கர வாடகை வண்டிகள் வழங்கும் ரேபிடோ (Rapido)வலை நிறுவனம் தொடர்பான விளம்பரத்தில் நடித்திருந்தார். மாநில போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்டும் பேருந்துகளை விட ரேபிடோ பாதுகாப்பானதாகவும், மலிவானதாகவும் இருப்பதாக  விளம்பரத்தின் மையக்கருத்து அமைந்துள்ளது.


உணவுக் கடை ஒன்றில் தோசை சுடும் நபராக வரும் அல்லு அர்ஜுன், " சாதா தோசைகளை போல் உள்ள வாடிக்கையாளர்கள் கூட்டம் நிறைந்த அரசுப் பேருந்துகளில் பயணித்தால்  மசாலா தோசை போல் மாறிவிடுகின்றனர்" என்று நையாண்டித் தனமாக தெரிவிக்கிறார். 






இந்த விளம்பரத்தை தெலுங்கானா போக்குவரத்து கழகம் வன்மையாக கண்டித்து வருகிறது. தெலுங்கானா போக்குவரத்துக் கழக நிர்வாக அதிகாரி விவி  சஜனர் இதுகுறித்து தெரிவிக்கையில்," மாநிலத்தின் உயிர்சக்தியாக விளங்கும் போக்குவரத்துக் கழகத்தை  இழிவுபடுத்தும் செயல். அனைவரையும் உள்ளடக்கிய வெகுஜன மக்களுக்கு  சேவை வழங்கிவருகிறோம். இத்தகைய அவமதிப்பு போக்குகளை நிர்வாகமும், பயனாளிகளும், அபிமானிகளும், மூத்த குடிமக்களும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். பொதுமக்களின் நலன்களை கருத்தில் கொண்டு ரேபிடோ நிர்வாகத்துக்கும், நடித்த அல்லு அர்ஜுனுக்கும் சட்ட நோட்டிஸ் அனுப்ப உள்ளோம்" என்று தெரிவித்தார். 


அரசுப் போக்குவரத்து:


விரைவான‌ நகரமயமாக்கல் நடவடிக்கை காரணமாக 2030-ஆம் ஆண்டிற்குள் தேசிய மொத்த  உள்நாட்டு உற்பத்தியில் 70% நமது நகரங்களின் மூலம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2030-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் நகர்ப்புறங்களின் மக்கள் தொகை சுமார் இரண்டு மடங்காக, 630 மில்லியனாக அதிகரிக்கும். இந்த அளவிலான வளர்ச்சிக்கு நாம் வசதியை ஏற்படுத்த வேண்டுமானால், நகர்ப்புற உள்கட்டமைப்புகளை கணிசமாக தரம் உயர்த்த வேண்டும் என்று பல்வேறு ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.


அதேநேரத்தில், இந்தியாவில் மொத்த கார்பன்டை ஆக்சைடு வெளியேற்றத்தில், 90 சதவீதத்துக்கும் மேல் வாகனப் போக்குவரத்தால் ஏற்படுகிறது என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. போக்குவரத்துத் துறையில் கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கு,  பொது அரசு போக்குவரத்துகளை ஊக்குவிக்க சமூக ஆர்வலர்கள் மும்முரமாக கூக்குரலிட்டு வருகின்றனர். 


மேலும், கிக் பொருளாதாரத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும், தொழிலாளர்கள் சந்தித்துவரும் சவால்களுக்கு நீடித்த தீர்வைக் கண்டறிய வேண்டும்  என்ற கோரிக்கையும் பல்வேறு தரப்பினரிடத்திலும் காணப்படுகிறது.  


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்







ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண