நொய்டாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய செல்ல நாயை கேதார்நாத் கோவிலுக்கு எடுத்துச் சென்றதால் அவர்மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நபர் கோயிலுக்குள் நாயைத் தூக்கிச் செல்லும் வீடியோ வைரலான நிலையில் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நொய்டாவை சேர்ந்த விகாஷ் தியாகி என்னும் அந்த நபர் தன்னுடைய ஹஸ்கி நாயான நவாபை கேதார்நாத் கோயிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். 


அங்கே செல்லநாய் நவாபும், விகாஷும் கோயிலைச் சுற்றி நிறைய வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்துக்கொண்டுள்ளனர். குறிப்பாக நவாப் நந்தி சிலையைத் தன் கால்களால் தொட்டு வணங்குவது, கோயில் பூசாரி நவாபுக்கு நெற்றியில் குங்குமம் இடுவது உள்ளிட்ட வீடியோக்கள் ஆன்லைனில் பதிவிட்டதும் வைரலாகியுள்ளது. 






இந்த வைரலானதும் கேதார்நாத் பத்ரிநாத் கோயில் கமிட்டியின் குழுவினர் விகாஷ் தியாகியின் மீது சீரிய நடவடிக்கை எடுக்கச் சொல்லி வலியுறுத்தியுள்ளனர். மேலும் மதம் சார்ந்த நம்பிக்கையை விகாஷ் அவமதித்து விட்டதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதை அடுத்து அந்த கமிட்டியின் தலைவர் சார்பாக தற்போது இருவர் மீதும் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டுள்ளது. 


இதற்கு பதிலளித்துள்ள விகாஷ், ”தனது நாய் நவாப் இந்தியா முழுவதும் உள்ள கோயில்களுக்கு பயணப்பட்டு வருவதாகவும் தற்போது எதற்கு இந்தத் தேவையில்லாத ட்ராமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். ‘நீச்சல் குளத்துக்குச் சென்றால் கூட பலர் போட்டோ எடுத்துப் போடுகின்றனர்.






நாங்கள் 20 கிமீ மலையேறி பயணம் செய்து சாமி பார்க்கச் சென்றோம். இதை வீடியோவாகப் பதிவுடுவதில் என்ன தவறு?” எனக் கேட்டுள்ளார். இவரது பதிவில் பலர் இவருக்கு ஆதரவாகப் பேசியுள்ளனர். யுதிஷ்டிரர் உடன் ஒரு நாயும் தபோவனத்துக்குச் சென்றதாக வரலாறு உண்டு. நாங்கள் நவாபுக்கு ஆதரவாக இருக்கிறோம் என கருத்து கூறியுள்ளனர்.


அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி கேதார்நாத் கோயிலுக்குச் சென்றபோது அங்கே பிரகாரங்களைச் சுற்றி வந்த புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலானது குறிப்பிடத்தக்கது.