கர்நாடகத்தில் மழை:
கடந்த 24 மணி நேரத்தில் நாட்டிலேயே அதிகபட்சமாக, கர்நாடகா உடுப்பியின் கொல்லூரில் 18 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. கேரளா மற்றும் கர்நாடகத்தின் கடலோர பகுதிகளில் மழை கொட்டி வரும் நிலையில், தமிழகத்திலும் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்துள்ளது.
அதிகளவு வெப்பம் பதிவு:
தெற்கின் சில மாநிலங்களிலும், வடகிழக்கின் சில மாநிலங்களில் மழை பெய்கிறது என்றால், வடக்கு, வடமேற்கு, தக்காண பீடபூமி பகுதிகளில் வெப்பம் அதிகமாக பதிவாகி உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. வானிலை மையத்தின் தகவலின்படி, பீகார், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், தெற்கு பஞ்சாப் மற்றும் மேற்கு ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் அனல் காற்று வீச வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், நாளை முதல் அனல் காற்று சற்று குறையும் என்பது ஆறுதல் தரக்கூடிய தகவல். நாட்டின் தலைநகர் டெல்லியைப் பொறுத்தவரை, வெப்பமான, வறண்ட சூழல் நிலவுவதற்கான வாய்ப்புதான் இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் கூறுகிறது.
மஞ்சள் அலர்ட்:
மழையைப் பொறுத்தவரை, அசாம், மேகாலயா, அருணாசலப்பிரதேசம், தெற்கு மற்றும் கடலோர கர்நாடகா, கேரளாவின் பல பகுதிகளில் கன மழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பல மாவட்டங்களுக்கு “மஞ்சள் அலர்ட்” எனும் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நிலவரம்:
தமிழகத்தை பொறுத்தமட்டில், ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை அறிக்கை கூறுகிறது. குறிப்பாக, அடுத்த 2 தினங்களுக்கு, கன்னியாகுமரி, தென்காசி, நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் மித மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைநகர் சென்னையை பொறுத்தவரை, பொதுவாக வெயில் காணப்பட்டாலும், அவ்வப்போது மேகமூட்டத்துடன் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் அளவு இருக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
முன்பே தொடங்கும் பருவ மழை:
இந்தியாவிற்கு அதித மழைப்பொழிவு தரக்கூடிய தென்மேற்கு பருவமழை, வழக்கமான ஜூன் முதல் வாரத்திற்குப் பதிலாக, இந்தாண்டு மே 27-ம் தேதியே தொடங்கும் என கூறப்பட்டிருந்தது. ஆனால், தற்போது வரும் 23 அல்லது 24-ம் தேதியே தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக, கேரளா, கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் உட்பட பல இடங்களில் கனமழை பெய்யும் என கூறப்படுகிறது. அதுமட்டுமல்ல, தமிழகத்தில் கன்னியாகுமரி முதற்கொண்டு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் லேசான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு தற்போதைக்கு குறைவு என வானிலை மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு விதிவிலக்கு:
இந்தியாவின் 80 சதவீத பகுதிகளுக்கு பெரும்பாலும் மழைப் பொழிவை தருவது தென் மேற்கு பருவமழைதான். ஆனால், இதில் தமிழகம் மட்டும் விதிவிலக்கு, தமிழகத்தில் மட்டும்தான் தென்மேற்கு பருவமழையை விட, அக்டோபர் மாதத்தில் தொடங்கும் வடகிழக்கு பருவமழைதான் அதிக மழைப் பொழிவை தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.