137 நாட்களுக்கு பிறகு சென்னையில் பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. 137 நாட்களாக பெட்ரோல்,டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாகி வந்தது. கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, ஒருசில மாதங்கள் வரை பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது. பின்னர் படிப்படியாக விலை உயர்ந்தது ஒரு லிட்டர் பெட்ரோல் 85 ரூபாயை எட்டியது. எதிர்கட்சியினரின் போராட்டம், பீகார் மாநில தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் டீசல் விலை மீண்டும் மெதுவாக உயர்ந்தது. தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பால் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைக்கப்பட்டது. தீபாவளி பண்டிகையையொட்டி பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. பெட்ரோல் மீதான கலால் வரி 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததால் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது. இதனைத் தொடர்ந்து தீபாவளி பண்டிகையையொட்டி பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது.



பெட்ரோல் மீதான கலால் வரி 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததால் பெட்ரோல், டீசல் விலை நாடுமுழுவதும் கணிசமாக குறைந்தது. பாஜக ஆளும் மாநிலங்களில், அந்தந்த மாநில அரசுகளும் வரியை குறைத்ததால் பெட்ரோல்- டீசல் விலை கணிசமாக குறைந்தது. இதையடுத்து, கடந்த நவம்பர் மாதம் முதல் சென்னையில் பெட்ரோல் லிட்டர் 101.40 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், 137வது நாளாக சென்னையில் நேற்று வரை பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதேவிலை நீடித்து வந்தது. பல்க் டீசல் விலை ரூ 25 ஆக உயர்ந்த போதும் சில்லறை விற்பனையில் டீசல் விலை உயராமல் இருந்தது. இந்த நிலையில் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி அறிவித்துள்ளன எண்ணெய் நிறுவனங்கள்.


ரஷ்யா மீது கடுமையான வர்த்தகத் தடை விதிக்கப்பட்ட நிலையில், உலக நாடுகள் அனைத்தும் தனது கச்சா எண்ணெய் தேவைக்கு OPEC நாடுகளை நம்பியிருக்கும் வேலையில், சவுதி அரேபியாவின் முக்கியமான எனர்ஜி டெர்மினலில் ஹூதி தாக்குதல் நடத்திய காரணத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதேவேளையில் அமெரிக்காவை போலவே ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யா மீது கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு வாங்குவதைத் தடை விதிக்க முடிவு செய்து அதற்கான ஆலோசனை செய்து வருகிறது.



இதனால் ஐரோப்பிய சந்தையில் மிகப்பெரிய கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் திங்கட்கிழமை 6 முதல் 8 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. தற்போது WTI கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 6.10 சதவீதம் உயர்த்து 111.09 டாலராகவும், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 6.46 சதவீதம் உயர்த்து 114.78 டாலராகவும் உயர்ந்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் எரிபொருள் விலை 136 நாட்களாக எவ்விதமான உயர்வையும் அறிவிக்காத மத்திய அரசு, 5 மாநில தேர்தல் முடிவிற்குப் பின்பு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டு உள்ள 40 சதவீத விலை உயர்வை ஈடு செய்ய மொத்த விலை விற்பனையில் மட்டும் ஒரு லீட்டர் டீசல் விலை 25 ரூபாய் அதிகரிக்கப்பட்டு உள்ளது.


நேற்றைய நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 101.40 ரூபாய்க்கும், டீசல் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்று விலையேறிய நிலையில், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 76 காசுகள் உயர்ந்து ரூ 102.16 க்கு விற்பனையாகிறது. அது போல் சென்னையில் ஒரு லிட்டர் டீசலின் விலை 76 காசுகள் உயர்ந்து ரூ 92.19க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயருமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையும் ரூ 50 உயர்ந்து ரூ 967.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.