மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பீர்பூம் மாவட்டத்தில் அமைந்துள்ளது ராமபுர்கத் கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தில் ஒரே வீட்டில் 7 நபர்களின் உடல்கள் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அந்த வீட்டின் மீது வீசப்பட்ட குண்டுவீச்சு காரணமாகவே அந்த வீடு தீப்பற்றி எரிந்து வீட்டில் இருந்தவர்கள் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்ததாக அந்த கிராமத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
அந்த மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாரிஷல் கிராம பஞ்சாயத்தின் துணைத்தலைவராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாதுஷேக்( வயது 38) என்பவர் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், அவர் போக்டூய் பகுதியில் நேற்று மாலை நின்று கொண்டிருந்தபோது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் அவர் மீது வெடிகுண்டுகளை வீசினர். படுகாயங்களுடன் ராம்புர்கத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாதுஷேக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவத்திற்கு பல இடங்களில் குண்டுகள் வீசப்பட்டதுடன் அந்த பகுதியில் ஐந்து வீடுகள் எரிக்கப்பட்டதாகவும் அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். அவ்வாறு எரிக்கப்பட்ட ஒரு வீட்டில் இருந்துதான் 7 சடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கிராம பஞ்சாயத்து துணைத்தலைவர் கொலைக்கு பழிவாங்கும் நோக்கத்திற்காகவே இந்த வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் சிலர் கூறுகின்றனர்.
ஆனால், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அந்த மாவட்ட தலைவர் மோண்டோல் கூறும்போது, மின்கசிவின் போது ஏற்பட்ட விபத்து காரணமாகவே தீப்பற்றி எரிந்து இந்த வீடுகள் எரிந்ததாகவும், அந்த கிராமத்தில் நேற்று இரவு எந்த வன்முறையும் நடக்கவில்லை என்றும், அந்த பகுதியைச் சுற்றியுள்ள சிசிடிவி கேமராக்களில் அதுபோன்ற எந்த சம்பவமும் நடக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக அந்த மாவட்ட எஸ்.பி.நாகேந்திரநாத் திரிபாதி கூறும்போது, ஒரே வீட்டில் இருந்து 7 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று மட்டும் கூறினார். மாநில அமைச்சர் பிர்காத் ஹக்கீம், ஆசிஸ் பானர்ஜி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ராம்புர்கத் கிராமத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்