பிரான்ஸின் தேசிய தினத்தில் கெளரவ விருந்தினராக கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி அந்நாட்டுக்கு இன்று புறப்பட்டு சென்றார். அதற்கு முன்பு, பிரான்ஸ் நாட்டின் செய்தித்தாளான லெஸ் எக்கோவுக்கு டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் பிரத்யேக பேட்டி அளித்தார்.


"ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வேண்டும்"


அப்போது, ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்க வேண்டும் என மோடி வலியுறுத்தினார். இப்போது அதிக மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியா, தனக்கான சரியான இடத்தை மீண்டும் பெற வேண்டும் என தெரிவித்தார்.


இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "பிரச்னை நம்பகத்தன்மை சார்ந்தது மட்டுமல்ல. இது மிகப் பெரிய விவகாரம். அதிக மக்கள்தொகை கொண்ட நாடு, மிகப்பெரிய ஜனநாயக நாடு, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினராக இல்லாதபோது, ​​​​எவ்வாறு உலகத்திற்காக பேசுவதாகக் கூற முடியும்?


உலக ஒழுங்கு, மாறுதலுக்கு உள்ளாகியுள்ளது. ஆனால், அதன்படி இல்லாத ஒரு முரண்பாடாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உள்ளது.
குறிப்பிட்டவர்களை மட்டும் உறுப்பினர்களாக கொண்ட அதன் பாரபட்சமின்மை வெளிப்படையின்மைக்கு வழிவகுக்கிறது. இது இன்றைய சவால்களை எதிர்கொள்வதில் அதன் உதவியற்ற தன்மையை அதிகரிக்கிறது. 


"தெற்கின் உரிமைகள் நீண்டகாலமாக மறுக்கப்படுகிறது"


ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா ஆற்ற வேண்டிய பங்கு உட்பட என்னென்ன மாற்றங்களைக் காண விரும்புகிறோம் என்பதில் பெரும்பாலான நாடுகள் தெளிவாக இருப்பதாக நான் நினைக்கிறேன். இதே கருத்தைதான், பிரான்ஸ் அதிபர் மேக்ரானும் கொண்டுள்ளார்.


உலகின் மிகப்பெரிய ஜனநாயகமாக, இணையற்ற சமூக மற்றும் பொருளாதார பன்முகத்தன்மையுடன், நமது வெற்றி ஜனநாயகம் வழங்குவதை மெய்ப்பிக்கிறது. பன்முகத்தன்மைக்கு மத்தியில் நல்லிணக்கம் சாத்தியமாகும். அதே நேரத்தில், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுக்கு சரியான இடத்தை வழங்க சர்வதேச அமைப்பு மற்றும் நிறுவனங்களிடம் இயல்பான எதிர்பார்ப்பு உள்ளது" என்றார்.


உலகளாவிய தெற்கு மற்றும் மேற்கு இடையே ஒரு பாலமாக இந்தியா இருந்து பங்கு வகிக்கும் என குறிப்பிட்ட பிரதமர் மோடி, "உலகளாவிய தெற்கின் உரிமைகள் நீண்டகாலமாக மறுக்கப்பட்டு வருகின்றன. 


இதன் விளைவாக, தெற்கின் நாடுகள் மத்தியில் ஒரு வேதனையான உணர்வு உள்ளது. இவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஆனால், முடிவெடுக்கும் போது அவர்கள் தனக்கென குரலை எழுப்ப இடம் அளிக்கப்படவில்லை. உலகளாவிய தெற்கின் தொடர்பாக ஜனநாயகத்தின் உண்மையான உணர்வு மதிக்கப்படவில்லை" என்றார்.


உக்ரைன் போர் குறித்து பேசிய அவர், "இந்தியாவின் நிலைப்பாடு தெளிவானது. வெளிப்படையாக உள்ளது. நிலையாக உள்ளது. இது போருக்கான காலம் அல்ல என்று கூறியுள்ளேன். பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலம் பிரச்னைகளை தீர்க்க இரு தரப்பினரையும் வலியுறுத்தியுள்ளோம். இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர உதவும். அனைத்து உண்மையான முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவு அளிக்க தயாராக உள்ளது என்று அவர்களிடம் கூறினேன்" என்றார்.


இந்தியாவின் பலம் குறித்து பேசியுள்ள அவர், "நமது ஏற்றுமதிகள் ஒருபோதும் அடிபணியவில்லை. ஆனால், யோகா, ஆயுர்வேதம், ஆன்மீகம், அறிவியல், கணிதம் மற்றும் வானியல், உலக அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கு நாங்கள் எப்போதும் பங்களிப்பவர்களாக இருந்து வருகிறோம்" என்றார்.