மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் நடைபெறவிருந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் செல்லவிருந்ததாகவும் ஆனால், அப்படி சென்றால் அவர் ஆர்.எஸ்.எஸ் அனுதாபியாக முத்திரைக் குத்தப்படுவார் என நண்பர்கள் எச்சரித்ததால் அந்த பயணத்தை அவர் ரத்து செய்ததாகவும் புதிதாக வெளியான புத்தகத்தில் அதிர வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது. 


"Kalam: The Untold Story" என்ற புதிய புத்தகத்தை அவரின் தனி செயலாளர் ஆர்.கே. பிரசாத் எழுதியுள்ளார். அதில்தான், பல திடுக்கிடும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. நிகழ்ச்சிக்கு வருவதாக சொன்னதால் அப்துல் கலாமின் பயணம் குறித்து ஆர்எஸ்எஸ் பெரிய அளவில் ஏற்பாடு மேற்கொண்டு விளம்பரம் செய்திருந்தது.


ஆனால், இறுதியில் அவர் எடுத்த திடீர் முடிவால் ஆர்.எஸ்.எஸ் தலைமை எரிச்சலடைந்ததாக புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இறுதியில், ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு கலாம் சென்றுள்ளார். ஆனால், முதலில் ஒப்பு கொண்ட தேதியில் இருந்து ஒரு மாதமான பிறகு, அங்கு நடைபெற்ற உள் அரங்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார்.


 






இருந்தபோதிலும், அந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் மேலிடம் யாரும் கலந்து கொள்ளவில்லை. கலாமின் 91வது பிறந்தநாளான இன்று நாடு முழுவதும் மாணவர்கள் கொண்டாடி வருகின்றனர். விண்வெளி விஞ்ஞானியான கலாம், 2002 முதல் 2007 வரை இந்தியக் குடியரசுத் தலைவராகப் பதவி வகித்தார். 'மக்களின் குடியரசு தலைவர்' என அன்புடன் அழைக்கப்படுகிறார்.


"மே 2014இல், எங்கள் அலுவலகத்திற்கு ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் ராம் மாதவிடமிருந்து அழைப்பு வந்தது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் முன்னிலையில் நடைபெற உள்ள பயிற்சி முகாமில் இளம் ஆர்எஸ்எஸ் தொண்டர்களிடம் முன்னாள் குடியரசுத் தலைவர் உரையாற்ற வேண்டும் என அவர்கள் விரும்பினார்கள்.


இந்த முகாம் ஜூன் 12ஆம் தேதி முடிவடையவிருந்தது. அதற்கு முன்னதாக அவருக்கு வசதியான தேதியில் கலாமைச் சந்திக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். பின்னர் ராம் மாதவ் கலாமைச் சந்தித்தார். மேலும், முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வார் என்று முடிவு செய்யப்பட்டது.


இருப்பினும், அவரது நண்பர்கள் சிலரின் ஆலோசனைகளின் விளைவாக, கலாம் தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டார்" என பிரசாத் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.


கடந்த 1995ஆம் ஆண்டு பாதுகாப்புத்துறை அமைச்சரின் அறிவியல் ஆலோசகராக இருந்த பிரசாத், 1995 ஆம் ஆண்டிலிருந்து 2015 வரை கலாம் இறக்கும் வரை அவரின் தனிச் செயலாளராக பணியாற்றினார்.