உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடை ஒன்றின் வெளியில் இருந்த மின்விளக்கை போலீஸ்காரர் ஒருவர் திருடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதையடுத்து, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சம்பவம் பதிவான சிசிடிவி வீடியோவே காரணமாக அமைந்தது. பிரயாக்ராஜ் மாவட்டத்தின் புல்பூர் காவல் நிலையப் பகுதியில் பணியமர்த்தப்பட்ட கான்ஸ்டபிள் ராஜேஷ் வர்மா, மூடப்பட்டிருக்கும் கடையை நோக்கி சாதாரணமாக உலா செல்வதை வீடியோவில் காணலாம்.
அவர் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, பல்பைக் கழற்றி பாக்கெட்டில் வைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பியதும் அதில் பதிவாகியுள்ளது.
தசரா விழாவில் போலீஸ்காரர் இரவுப் பணியில் இருந்துள்ளார். இச்சம்பவம் அக்டோபர் 6ஆம் தேதி நடந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர். மறுநாள் காலை பல்பு காணாமல் போனதைக் கவனித்த கடைக்காரர், போலீஸ்காரர் ஒருவர் மின்விளக்கைத் திருடும் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகளை பார்த்துள்ளார்.
பொதுமக்களுக்குச் சேவை செய்ய வேண்டிய காவல்துறை அலுவலரே, பல்பை திருடியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரும் சலசலப்பைத் தொடர்ந்து போலீஸ்காரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை அலுவலர், சமீபத்தில் பதவி உயர்வு பெற்று, கடந்த எட்டு மாதங்களாக புல்பூர் காவல் நிலையத்தில் பணியமர்த்தப்பட்டது தெரிய வந்துள்ளது.
தான் இருந்த இடம் இருட்டாக இருந்ததால் விளக்கை கழற்றி அங்கி மாட்டியதாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ்காரர் விளக்கம் அளித்துள்ளார். அவர் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சமீபகாலமாகவே, உத்தரப் பிரதேச காவல்துறைக்கு பெரும் தர்மசங்கடம் ஏற்பட்டு வருகிறது. முன்னதாக, சில நாட்களுக்கு முன்பு கான்பூரில் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த நபரின் பாக்கெட்டில் இருந்து மொபைல் போனை திருடிய போலீஸ்காரர் ஒருவர் பிடிபட்டது விமர்சனத்திற்கு உள்ளாகி இருந்தது.