இனி தமிழில் எம்பிபிஎஸ் பாடத்தைப் படிக்கும் வகையில், தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் மருத்துவப் பாடங்களைத் தமிழுக்கு மொழிமாற்றி வருகிறது. 


நாட்டிலேயே முதல் முறையாக, மத்தியப் பிரதேசத்தின் 13 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, உடற்கூறியல், உடலியல் மற்றும் உயிர் வேதியியல் ஆகிய மூன்று எம்பிபிஎஸ் பாடங்கள் இந்தியில் கற்பிக்கப்படும். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாளை (அக்டோபர் 16ஆம் தேதி) போபாலில் மொழிபெயர்க்கப்பட்ட எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு புத்தகங்களை வெளியிடுகிறார். இதன் மூலம் நாட்டிலேயே முதல்முறையாக இந்தியில் மருத்துவக் கல்வி தொடங்கப்படுகிறது.


மத்தியக் கல்வி அமைச்சகத்தின்கீழ் செயல்படும் இந்திய மொழிகளை ஊக்குவிப்பதற்கான உயர் நிலைக்குழு, இதுகுறித்த பேச்சுவார்த்தையை தேசிய மருத்துவ ஆணையத்துடன் நடத்தி வருகிறது. அத்துடன் மாநில மருத்துவ ஆணையம், மருத்துவப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், மருத்துவர்கள் மற்றும் பேராசிரியர்களுடன் மாநில மொழிகளில் மருத்துவம் குறித்த கலந்துரையாடல் நடத்தப்பட்டு வருகிறது. 


இதுகுறித்து  இந்திய மொழிகளை ஊக்குவிப்பதற்கான உயர் நிலைக் குழுவின் தலைவர் சாமு கிருஷ்ண சாஸ்திரி கூறும்போது, ’’தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சுதா சேஷய்யன் மருத்துவப் பாடங்களை தமிழில் மொழிபெயர்க்கும் பணியை ஏற்கெனவே தொடங்கியுள்ளார். 


மாணவர்களுக்கு ஆங்கிலத்திலேயே மருத்துவப் பாடத்தைக் கற்பிக்கும் பணியுடன், இந்தி அல்லது பிராந்திய மொழிகளிலும் மாணவர்களுக்கு மருத்துவப் பாடங்கள் கற்பிக்கப்படும். இவ்வாறு செய்வதற்கு 90 சதவீத நோயாளிகளுக்கு ஆங்கிலம் தெரியாததுதான் முக்கியக் காரணம். 


அதேபோல பெரும்பாலான மாணவர்கள் தங்களின் தாய்மொழிகளில் பள்ளிக் கல்வியை முடித்துவிட்டு, கல்லூரிக்குள் நுழைகின்றனர். அவர்களுக்கு உடனடியாக ஆங்கிலத்தில் மருத்துவக் கல்வி வழங்கப்படுவதால், கற்கத் திணறுகின்றனர். 


கிராமப் புறங்களைச் சேர்ந்த மாணவர்கள், தங்களின் சொந்த ஊர்களிலோ, கிராமங்களிலோ பணியாற்ற விரும்புகின்றனர். தாய்மொழி மூலம் மருத்துவக் கல்வியை அளிப்பதன்மூலம் கிராமங்களில் மருத்துவ வசதிகளை வழங்க முடியும். எனினும் இதன் மூலம் மருத்துவக் கல்வியின் தரம் பாதிக்கப்படாது’’ என்று சாமு கிருஷ்ண சாஸ்திரி தெரிவித்துள்ளார். 




இந்திக்கு அதிக முக்கியத்துவம் 


மத்தியில் பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்து இந்திக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதாகவும் குறிப்பாக தென் மாநிலங்களில் இந்தி திணிக்கப்படுவதாகவும் எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.


இதற்கிடையே மத்தியப் பல்கலைக்கழகங்கள் உள்பட அனைத்து தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் அல்லாத கல்வி நிறுவனங்களிலும் பயிற்று மொழியாக ஆங்கிலத்துக்கு பதிலாக இந்தி மொழி அறிமுகம் செய்யப்பட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்தது.


கடந்த மாதம், குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு இதுகுறித்த அறிக்கையை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையின் 11வது தொகுதியில், ஆங்கிலம் மிகவும் அவசியமான இடங்களில் மட்டுமே பயிற்றுவிக்கும் மொழியாக இருக்க வேண்டும் என்றும், அந்த நிறுவனங்களில் படிப்படியாக ஆங்கிலத்திற்கு பதில் இந்தியை மாற்ற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல இந்தி மொழி பேசாத மாநிலங்களில், பிராந்திய மொழிகள் அறிமுகம் செய்யப்பட வேண்டும் என்றும் குழு பரிந்துரை செய்தது. 


மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற தேசிய கல்விக் கொள்கையின் பரிந்துரைப்படி இவை அனைத்தும் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.