"நான் அவரை என்ன செய்துவிட்டேன்? பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டேனா?"
பெண் ஆர்வலரை ஏன் பொது இடத்தில் வைத்து மிரட்டுனீர்கள் என செய்தியாளர் கேட்ட கேள்விக்கு கர்நாடக பாஜக எம்எல்ஏ அரவிந்த் லிம்பாவலி அளித்த பதில் இதுதான்.
காங்கிரஸ் கட்சிக்காக பணியாற்றி வரும் ஆர்வலர் ரூத் சாகே மேரி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வைட்ஃபீல்டை பார்வையிட்டபோது எம்எல்ஏ லிம்பாவலியை சந்திக்க முயற்சி செய்தார். அப்போது, ரூத் கொடுக்க வந்த மனுவை லிம்பாவலி பறிக்க முயற்சி செய்தார்.
ரூத், தனது பிரச்சினைகளை அவரிடம் விளக்க முயற்சித்த போது, கடிந்து கொண்ட லிம்பாவலி, அவரை மிரட்டினார். இச்சம்பவம் பதிவாகியுள்ள வீடியோவில், ரூத்தை சிறையில் அடைக்க லிம்பாவலி உத்தரவிடுகிறார். செப்டம்பர் 3 ஆம் தேதி, கன்னட செய்தி தொலைக்காட்சியான திக்விஜயா டிவியின் செய்தியாளர் ஒருவர் இச்சம்பவம் குறித்து எம்எல்ஏவிடம் கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக அந்த தொலைக்காட்சி வெளியிட்ட ஒரு வீடியோவில், பேட்டி தொடங்கும் முன் எம்எல்ஏ செய்தியாளரிடம் பேசுவதைக் காணலாம்.
"பெண்களுக்கு ஆதரவாகப் பேசுகிறாய். மக்களுக்கு ஆதரவாகப் பேசு. அதைத்தான் நான் சொல்ல வருகிறேன். நான் என்ன செய்தேன்? நான் அவரை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டேனா?" என எம்எல்ஏ செய்தியாளரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். ரூத் தன்னை போலீசார் எப்படி பிடித்து வைத்தனர் என்பது குறித்து ஊடகங்களிடம் விளக்கி இருந்தார்.
உண்மையில் என்னதான் நடந்தது?
1971ஆம் ஆண்டு கட்டப்பட்ட தனது சொத்தை புருஹத் பெங்களூரு மகாநகர (பிபிஎம்பி) உள்ளாட்சி அமைப்பு இடிக்க முயற்சிப்பதாக ரூத் கூறியுள்ளார். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், எம்எல்ஏ பொதுவெளி என்னுடன் சரியாக நடந்துகொண்டிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இரவு 10 மணி வரை தன்னை காவல் நிலையத்தில் வைத்திருந்ததாகவும், செல்போனில் அழைக்க அனுமதிக்கப்படவில்லை என்றும் ரூத் குற்றம் சாட்டினார். தன்னை தாக்க முயன்றதாகவும் ஆக்கிரமிப்பை அகற்றுமாறு தான் அந்தப் பெண்ணிடம் கூறியதாக லிம்பாவலி தனது தரப்பில் விளக்கம் அளித்துள்ளார்.
ஜூன் மாதம் நடைபெற்ற மற்றொரு நிகழ்வில், பெங்களூரு ராஜ்பவன் சாலையில் போக்குவரத்து விதிமீறலுக்காக எம்எல்ஏவின் மகள் ரேணுகா லிம்பாவலி தடுத்து நிறுத்தப்பட்டார். அப்போது, போக்குவரத்து போலீஸாருடன் ரேணுகா வாக்குவாதத்தில் ஈடுபட்டு சர்ச்சையில் சிக்கினார்.