தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக பாஜகவை ஆட்சியில் அமர்த்திய பி.எஸ்.எடியூரப்பா மூன்றாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்ற  2 ஆண்டுகளில் தனது பதவியை ராஜினாமா செய்ததுள்ள நிலையில் கர்நாடகவின் அடுத்த முதல்வர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.


கர்நாடகாவில் பாஜகவை பலப்படுத்திய பெருமை பி.எஸ்.எடியூரப்பாவுக்கு எப்போதும் உண்டு என்றாலும் அவர் பாஜகவை விட்டு விலகி தனிக்கட்சியை தொடங்கியவர். 2012இல் பாஜகவில் இருந்து விலகி 2013இல் தனிக்கட்சி தொடங்கி 2014இல் மீண்டும் பாஜகவிற்கு எடியூரப்பா திரும்பியிருந்தாலும், அவரின் செயலை பாஜக மேலிடத் தலைமை மறக்கவோ மன்னிக்கவோ இல்லை என்றே கூறப்படுகிறது.



கர்நாடக அரசியல் என்பது பெரும்பாலும் சாதி மற்றும் வட்டாரத்தில் செல்வாக்கு பெற்றுள்ள தலைவர்களால் இயக்கப்படுகிறது. பெரும்பாலான அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சிகளானது சில சமூகங்கள் அல்லது சில வட்டாரங்களில் அழுத்தமாக வேரூன்றி உள்ளன. கர்நாடகாவை பொறுத்தவரை 15 முதல் 17 சதவீகிதம் வரை மக்கள் தொகையை கொண்ட லிங்காயத் சமூகத்தின் தலைவராகவே பி.எஸ்.எடியூரப்பா பார்க்கப்படுகிறார். இருப்பினும் தற்போதுள்ள பாஜக தலைமையானது சாதிய கணக்கீடுகளை கருத்தில் கொள்ளாமல், ஒரு வலுவான தொண்டர் படையை உருவாக்க விரும்புவதாக கூறும் அரசியல் விமர்சகர்கள்.  கட்சிக்கும் ஆட்சிக்கும் புதிய தலைமை வேண்டும் என்பதை கட்சி மேலிடம் நீண்டகாலமாக பரிசீலித்து வந்த நிலையில் கொரோனா தொற்று பரவல், 5 மாநிலத் தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் தாமதமானதாக கூறப்படுகிறது.


கடந்த சில நாட்களாக எடியூரப்பாவின் குடும்பத்தினர் கர்நாடக அரசில் ஆதிக்கம் செலுத்தி வருவதுடன், எடியூரப்பாவின் மகன் பி.ஒய்.விஜயேந்திரா நிழல் முதல்வர் போல் செயல்பட்டு வருவதாக பல பாஜக தலைவர்கள் கட்சி மேலிடத்திற்கு புகார் தெரிவித்ததுடன் பல்வேறு ஊழல் புகார்களையும் அனுப்பி இருந்தனர்.


காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய மேலிடத் தலைமைகளுக்கு செவிமடுக்கும் மற்ற மாநில முதல்வர்களை போலல்லாமல் சுதந்திரமாக செயல்படும் நபராக எடியூரப்பா இருப்பதை பாஜக மேலிடம் விரும்பவில்லை, இதனால் அவர்கள் சொல்வதை கேட்கும் தலைமை வேண்டும் என்பதில் பாஜக தலைமை உறுதியாக இருந்ததன் வெளிப்பாடே முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்ய காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.


முதல்வராக வாய்ப்புள்ளதாக கூறப்படும் முருகேஷ் நிரானி, அரவிந்த் பெல்லட் மற்றும் எடியூரப்பாவின் மகனான பி.ஒய்.விஜயேந்திராவும் கடந்த மூன்று நாட்களாக டெல்லியில் முகாமிட்டுள்ளனர். இதுமட்டுமின்றி உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, பிராமணர் சமூகத்தை சேர்ந்தவர்களான நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி மற்றும் கட்சியின் ஒருங்கிணைப்பு செயலர் பி.எல்.சந்தோஷ், ஒகலிக்கர் சமூகத்தை சேர்ந்த தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி ஆகியோரின் பெயர்கள் அடுத்த முதல்வருக்கான பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது.